டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு சுகாதார அமைச்சுக்கு ரிம20 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிதலை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பொது மருத்துமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஓர் அரசாங்க மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருந்து கொடுக்க இயலாமல் போன சம்பவத்தையும் கூறினார்.
பிரதமர்துறையிலிருந்து ரிம12.4 பில்லியனையும், ரிம8.3 பில்லியனை பாதுகாப்பு அமைச்சிலிருந்தும் சுகாதார அமைச்சுக்கு மாற்றிவிடக் கோரும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி அவர் மக்களவைக் கேட்டுக்கொண்டார்.
மருந்துக்காக அடுத்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரிம4.2 பில்லியன் போதுமானதல்ல என்று சார்ல்ஸ் கூறினார்.
மருந்துகளின் விலை ஏற்றம் மலேசியர்களுக்குப் பெரும் சுமையாகியுள்ளது, குறிப்பாக, புற்றுநோய் மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏனென்றால் மருந்துகளின் விலை அதிகமாகியுள்ளது என்றாரவர்.
மருந்துகளின் விலை ஏற்றத்தினால் குறைந்தபட்சம் 30 விழுக்காட்டு தனியார் மருத்துவமனை நோயாளிகள் பொது மருத்துவமனைகளுக்கு மாறியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துமனை ஓர் இரத்தப்புற்று நோயாளிக்கு மருந்து கொடுப்பதை நிறுத்தி விட்டது. நீ எப்படியோ சாகப் போகிறாய். உனக்குக் கொடுத்து மருந்தை மருத்துவமனை வீணாக்க விரும்பவில்லை என்று அந்த நோயாளிடம் கூறப்பட்டதாம்.
பட்ஜெட் சிக்கனத்தால், மருத்துவமனைகள் நோயாளிகளின் வாழ்நாளை நிர்ணயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன என்று கூறிய சார்ல்ஸ் சந்தியாகு, அவரது முன்மொழிதலுக்கு ஆதரவு அளிக்கும்படி சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.