எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), சோசலிசம் 2017 நிகழ்ச்சியை, ‘இடதுசாரி அரசியல் இன்றைக்கு ஏற்புடையது!’ என்றக் கருப்பொருளோடு ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்ந்து 13-வது ஆண்டாக, பி.எஸ்.எம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு சமகால விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
ஆரம்பக் காலத்தில், சோசலிச சிந்தனைகளை மலேசியர்களிடையே பரவச்செய்ய, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் சொன்னார்.
நாளடைவில், தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, சோசலிசப் பார்வையில் அணுகுவது மற்றும் அதற்கு எப்படி சோசலிச அடிப்படையில் தீர்வு காண்பது என ‘சோசலிசம்’ விரிவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாண்டு, காலை 9 மணிக்கு, கோலாலம்பூர் – சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில், ஒருநாள் நிகழ்வாக, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சோசலிசம்’ நிகழ்ச்சியில், 4 முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவை :
- இனவாத, பாரபட்ச அரசியல் – இன்னும் எத்தனைக் காலத்திற்கு?
- ‘பண்டோங் 2’ மாநாட்டை ஒருங்கிணைக்கும் தகுதி, நுசந்தாராவுக்கு உள்ளதா?
- இளைஞர்களின் போராடும் ஆர்வம், சமூக ஊடகங்களிலா? அல்லது களத்திலா?
- இரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவுநாள்
நிகழ்ச்சியில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், வழக்குரைஞர் கே.எஸ். பவானி, பேன்ஸ் அலி உள்ளிட்ட, உள்நாட்டுப் பேச்சாளர்களோடு, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சோசலிச ஆர்வலர்களும் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கவுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், 016 440 7422 என்ற எண்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, தங்களைப் பதிந்துகொள்ளலாம் என சிவராஜன் தெரிவித்தார்.
குறிப்பு : நிகழ்ச்சி தேசியமொழியில் நடைபெறும்.