அரசாங்க ஊழியர்களுக்கு மாதம் ஒரு முறை சம்பளம் வழங்குவதை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும், எனப் பொதுச் சேவை தலைமை இயக்குநர் ஷைனால் ரஹிம் செமான் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மாதம் இரண்டு முறை ஊதியம் வழங்க, முன்னோடி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று, செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான அறிக்கையை அவர் மறுத்ததோடு, அது மலேசியாவில் நடந்தது அல்ல, அண்டை நாடு ஒன்றில் நடந்தது என்று கூறினார்.
ஆக, இது தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நாட்டின் அரசு ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அந்த இணையத்தள அறிக்கையின் படி, உயர்ந்து வரும் எரிபொருள் விலையின் விளைவாக, தங்கள் தினசரி செலவுகள் மற்றும் வீட்டுத் தேவைகளை நிர்வகிக்க, பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த அறிக்கையில் உண்மையேதும் இல்லையென, ஷைனால் ரஹிம் தெரிவித்தார்.

























