மாநில அரசாங்கத்தின் உதவியை வழங்க வந்த முதல்வர் லிம் குவான் எங்-ஐ, பள்ளியில் அனுமதித்ததற்காக, பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவரை, இடமாற்றம் செய்த மாவட்டக் கல்வி இலாகாவை டிஏபி இன்று குற்றம் சாட்டியது.
செப்ராங் பிறை மாநகர சபை உறுப்பினர், சதீஸ் முனியாண்டி, தலைமையாசிரியர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், லிம் பள்ளியினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
“பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களைத் தவிர, மலேசியாவில் வேறு எந்தவொரு பள்ளியிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
பினாங்கு மாநிலக் கல்வி இயக்குனர் , ஷாரி ஒஸ்மானைத் தொடர்புகொண்டபோது, அரசியல் காரணங்களுக்காக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மாற்றப்பட்டார் என்பதனை மறுத்தார்.
“ஆசிரியர்கள் பள்ளி மாற்றப்படுவது சாதாரணமான விஷயம்.
“பள்ளிகளை வலுப்படுத்தவே நாங்கள் ஆசிரியர்களை இடமாற்றம் செய்கிறோம். சில தரப்பினர் குற்றம் சுமத்துவது போல் அல்ல,” என ஷாரி மலேசியாகினிக்குத் தெரிவித்தார்.
பினாங்கு முதலமைச்சர் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டது ஒரு குற்றச் செயலா என சத்தீஸ் கேள்வி எழுப்பினார்.
“கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அரசியல் நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனுமதித்த தலைமையாசிரியருக்கும் இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டதா?”, என்றும் அவர் கேட்டார்.
“கல்வி அமைச்சர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்”, என்று டிஏபி பத்து கவான் தொகுதியின் செயலாளருமான சதீஷ் கூறினார்.