அரசுக்குச் சொந்தமான தங்கும்விடுதி ஒன்றின் அறையில், பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த உள்கட்சி கூட்டத்திற்கான அனுமதியை, தங்கும் விடுதியின் நிர்வாகம் இரத்து செய்தது குறித்து கருத்துரைக்க சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் மறுத்துவிட்டார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பிகேஆரின் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலி, ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவின் தலைவரும் பண்டார் பாரு கூலிமின் நாடாளுமன்ற உறுப்பினருமான, அஸிஸ் ஷேக் ஃபட்ஷீரைதான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் நஸ்ரி தெரிவித்தார்.
“அஸ்மின் தவறான இடத்தில் குரைத்துகொண்டு இருக்கிறார். அந்தத் தங்கும்விடுதி, நிதி அமைச்சின் கீழ் உள்ளது.
“அதன் தலைவர் அஸிஸ் ஷேக் ஃபட்ஷீர், அதனால் அவரிடம் கேளுங்கள்,” என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.
முன்னதாக இன்று, ஹோட்டல் ஶ்ரீ மலேசியா, ஈப்போ கிளை இட அனுமதியை இரத்து செய்தது பற்றி, நஸ்ரி விளக்கமளிக்க வேண்டுமென்று அஸ்மின் கேட்டிருந்தார்.
இதற்கிடையே, இடம் இரத்தானது குறித்து, அவ்விடுதி நிர்வாகம் நேற்று இரவுதான் தங்களுக்குத் தெரிவித்ததாக, பேராக் பிகேஆர் செயலாளர் அப்துல் யூனூஸ் ஜமஹரி சொன்னார்.
மேலும், அரசியல் அழுத்தம் காரணமாகவே, இட அனுமதி இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர், அக்கூட்டம் பேராக் பிகேஆர் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது.
அஸிஸ் தரப்பு கருத்துகளைப் பெற, மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.