சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற முடியும் என்கிறார் சிவநேசன்

 

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் தமது மற்றும் தமது கட்சியின் நற்பெயர் அவரது வெற்றிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தாம் சுங்கை சிப்புட் தொகுதியில் கடுமையாக உழைத்து வருவதாக 61 வயதான சிவநேசன் கூறுகிறார்.

மேலும், தமிழ் மலர், தமிழ் நேசன், மக்கள் ஓசை மற்றும் மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளேடுகளுக்கு வழக்கமாக தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவதாகவும் அவர் கூறினார்.

“டிஎபி (சுங்கை சிப்புட்டுக்கு) வந்தால், விரும்பினாலும் இல்லை என்றாலும், மக்கள் ரோக்கெட்டுக்கு (சின்னம்) ஆதரவளிப்பார்கள்”, என்று சமீபத்தில் பீடோர், சுங்கையில் சந்தித்த போது சிவநேசன் மலேசியாகினியிடம் கூறினார்.

இது முன்பு ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. லியு ஆ கிம் டிஎபியிலிருந்து 1999 ஆம் ஆண்டில் விலகிய போது, புதிதாக வந்த தெரசா கோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

சீன வாக்காளர்கள், 39 விழுக்காட்டினர், கிட்டத்தட்ட அனைவரும் டிஎபிக்கு ஆதரவு அளிப்பார்கள். மலாய் வாக்காளர்கள், 33 விழுக்காட்டினர், பிஎன்னுக்கு வாக்களிக்கக்கூடும்.

இதன் அடிப்படையில், டிஎபியின் முக்கிய தேர்தல் இலக்கு கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினராக இருக்கும் இந்திய வாக்காளர்கள் என்று சிவநேசன் விளக்கம் அளித்தார்.

இந்தியர்களின் வாக்குகள் மஇகா, பிஎஸ்எம் மற்றும் டிஎபி ஆகியவற்றுக்கிடையில் சமமாகப் பிளவுபடும் நிலையில், சீன வாக்காளர்களின் ஆதரவோடு டிஎபி வெற்றி பெறும் வாய்ப்பு பிஎஸ்எமைவிட அதிகமாக இருக்கிறது .

மஇகா இங்கு பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்று சிவநேசன் கூறினார்.