மியான்மார், ராகினில், ரோஹிங்கியா மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் செய்துள்ள முதலீடுகளைத் திரும்பப்பெற பெட்ரோனாசிற்கு அரசாங்கம் அழுத்தம் தரவேண்டும் என்று கோலத் திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர், ராஜா கமாருல் பஹ்ரின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்த ஒரு மனுவுக்கு, அந்தத் தேசிய எண்ணெய் நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று திரெங்கானு மாநில அமானா தலைவருமான அவர் புகார் கூறினார்.
‘ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சட்டபூர்வமான மியன்மார் குடிமக்களாக அங்கீகரிப்பதோடு; அவர்களுக்கு எதிரான அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்பையும், பாகுபாடுகளையும் மற்றும் குற்றச்செயல்களையும் மியன்மார் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்’ இல்லையேல், ‘அடுத்த ஆண்டு தொடக்கம், மியான்மாரில் எந்தவித நடவடிக்கையையும் எந்தவொரு பங்கேற்பையும் கைவிட வேண்டும்’ என்ற 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று, பெட்ரோனாசிடம் கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்க, புத்ராஜெயா அனுமதிக்க வேண்டும் என்றும் ராஜா காமருல் வலியுறுத்தியுள்ளார்.
“இப்பிரச்சினையில் அரசாங்கம் உரத்த குரல் எழுப்பும் என்று கூறப்பட்டது, ஆனால் உண்மையில் அது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை, நாடாளுமன்றத்தில் அதைப் பற்றி ஏன் நாம் பேசக்கூடாது என்பதை விளக்குங்கள்,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து, நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
சமீபத்தில் மணிலாவில் நடந்த ஆசியான் உச்சமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மியான்மாரின் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரிடம் பிரதமர் நஜிப் ரசாக் இதுகுறித்து பேசியதாக வெளியான அறிக்கை பற்றி ராஜா கமாருல் கருத்துத் தெரிவித்தார்.
நஜிப் அப்பிரச்சனையில் நேர்மையுடன் செயல்படுவதை நிரூபிக்க, நாடாளுமன்றத்தில் அதனை விவாதித்து, மியான்மாரில் முதலீடு செய்வதை நிறுத்த பெட்ரோனாசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா, என்று கமாரூல் சவால்விட்டார்.
அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான செவ்ரான் , ரோஹிங்கியாவின் இன உரிமைகளை மதிக்க வேண்டுமென, மியான்மர் அரசாங்கத்திற்குச் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.
“அதேபோல், நமது அரசாங்கமும், பேசுவதோடு நின்றுவிடாமல், இந்த விசயத்தில் இன்னும் கண்டிப்பாக இருக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அப்படியே ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்பதையும் கொஞ்சம் அழுத்தம் கொடுங்கள். இதுவும் மனிதப் படுகொலைகள் தாம். உங்களுக்கு அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு மட்டும் அக்கறை வருமா?