14-வது பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்குமாறு, பெர்காசா உறுப்பினர்களை வலியுறுத்த, இப்ராஹிம் அலியால் முடியுமென ஜமால் யூனூஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
காரணம், அன்றிலிருந்து இன்றுவரை, அம்னோ மற்றும் பெர்காசாவின் போராட்டமும் இலக்கும் ஒன்றுதான் – மதம், இனம், நாடு ஆகியவற்றை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும், என்று அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவருமான ஜமால் தெரிவித்தார்.
“மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு அம்னோவைப் பார்த்தால், குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முற்றிலும் மாறுபட்டது. அவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுகிறார்கள், ஆனால் அம்னோ, அன்றிலிருந்தே நாடு மற்றும் இனம் இரண்டிலும் உறுதியாக உள்ளது.
“பெர்காசா தலைவர், இறுதியாக அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு ஆதரவாக வாக்களிக்க பெர்காசா உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்,” என்று பெர்காசா வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஜமால் தெரிவித்தார்.
500,000 -க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதால், பெர்காசா ஓர் அரசியல் கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்க வல்லது என்று இப்ராஹிம் முன்பு கூறியிருந்தார்.
2015-ஆம் ஆண்டில், பெர்காசா மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களால், பாஸ் உடன் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது.