மருத்துவ சிகிட்சைக்காக ஜிம்பாப்வே அதிபர் ரோபெர்ட் முகாபி மலேசியாவுக்கு வருவதை அரசாங்கம் தடுக்காது அல்லது எதிர்ப்பு தெரிவிக்காது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.
“நமக்கு ஆட்சேபம் இல்லை. நாம் (மலேசியா) மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை”, என்று அவர் ஹூத்தான் மெலிந்தாங்கில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தமது நாட்டில் பதவியிலிருந்து விலகக் கோரி கடும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் முகாபியும் அவரது துணைவியார் கிரேஸும் சிங்கப்பூர் அல்லது மலேசியாவுக்கு வரக்கூடும் என்பது குறித்து ஸாகிட்டிடம் கேட்கப்பட்டது.
அப்படி கூறப்படுகிறது, ஆனால் அவர் மலேசியாவுக்கு அல்லது சிங்கப்பூருக்கு வருவது பற்றி தமக்கு எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை என்று ஸாகிட் கூறினார்.
ஆனால், அந்த 93 வயதான ஜிம்பாப்வேயின் அதிபர் கோலாலம்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெறுவதற்காக பல தடவைகளில் வந்துள்ளார் என்பதை ஸாகிட் உறுதிப்படுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் மூன்று தடவைகளில் அவர் மலேசியாவில் சிகிட்சை பெற்றுள்ளார் என்று கூறிய ஸாகிட், மேற்கொண்டு சிகிட்சை பெற அவர் விரும்பினால் மலேசியாவுக்கு வரலாம் அல்லது இன்னொரு நாட்டிற்குச் செல்லலாம் என்று ஸாகிட் மேலும் கூறினார்.
எது எப்படியோ , முகாபே மலேசியாவிற்கு வருவது உறுதியாகிவிட்டது ! அது அடைக்கலமா ?
அல்லது அஸ்பத்திரி நோயாளியாகவா ?
அதுதான் தெரியவில்லை.