யுஇசி விவாதம்: அந்த மூவரை மசீச ஏன் தட்டிக்கேட்கவில்லை?, டிஎபியின் தியோ கேட்கிறார்

 

ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு சான்றிதழ் (யுஇசி) விவகாரத்தில் அப்போது அரசாங்கத்தில் இருந்த டாக்டர் மகாதிர், முகைதின் யாசின் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய மூவரையும் கேள்வி கேட்க மசீச தவறி விட்டது ஏன் என்று டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மசீசவை கேட்கிறார்.

அந்த மூவரும்தான் யுசிசி அங்கீகரிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் என்று இப்போது மசீசவின் பிரச்சாரப் பிரிவின் தலைவர் தி லியன் கெர் கூறியிருந்ததற்கு பதில் அளித்த தியோ இக்கேள்வியை எழுப்பினார்.

“தி, மகாதிர், முகைதின் மற்றும் அன்வார் ஆகிய மூவரும் அரசாங்கத்தில் இருந்த போது, யுஇசி அங்கீகரிக்கப்படுவதற்கு அவர்கள் தடங்கலாக இருந்தனர் என்று கூறியதற்கு நன்றி.

“அப்படி என்றால், யுஇசியின் முதல்தர தற்காப்பாளர் மசீச என்பது உண்மையானால், ஏன் மசீச அதே அரசாங்கத்தில் அவர்களுடன் உட்கார்ந்திருந்தது?

“அவர்கள் அரசாங்கத்தில் இருந்த போது மசீச அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதா அல்லது அவர்கள் அதிகாரத்தில் இல்லாதபோதுதான் அவர்களுக்குச் சவால் விடும் துணிவைப் பெற்றதா?, என்று தியோ விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கேட்கிறார்.

பிரதமர் நஜிப் யுஇசியை அங்கீகரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தி கூறிக்கொண்டது பற்றி கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ கருத்துரைத்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய தியோ, மலேசியாவில் சீன சுயேட்சையான பள்ளிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்காது என்று கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் நாடாளுமன்ற அளித்த பதிலைச் சுட்டிக் காட்டினார்.

மேலும், சிஎல்பி எனப்படும் சட்டத் தொழில் சான்றிதழ் படிப்பிற்கு யுஇசி சான்றிதழ் அங்கீகரிக்கப்படாது என்று சட்டத் தொழிலுக்கு தகுதிவழங்கும் வாரியம் எடுத்துள்ள முடிவையும் தியோ சுட்டிக் காட்டினார்.

“ஆகையால், மகாதிர், முகைதின் மற்றும் அன்வார் ஆகியோர் பிஎன் அரசாங்கத்தில் தொடர்ந்து இல்லாதிருக்கையில், இப்போது யுஇசியின் அங்கீகாரம் மற்றும் சீன சுயேட்சையான பள்ளிகள் ஆகியவற்றுக்கு தடங்கலாக இருப்பவர்கள் யார் என்று எங்களுக்கு தி விளக்கம் அளித்தாக வேண்டும்”, என்று தியோ கோரியுள்ளார்.

யுஇசி அங்கீகாரத்திற்கு அன்வார் தடங்கலாக இருந்தார் என்று தி கூறிக்கொண்டாலும், பிகேஆர் அன்வாரின் தலைமைத்துவத்தின்கீழ் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிக்கையில் பக்கத்தான் ராக்யாட் யுஇசியின் அங்கீகாரத்தைச் சேர்த்துக் கொண்டுள்ளது என்று தியோ கூறினார்.

யுஇசி மீதான அதன் நிலைப்பாடு குறித்து சரியான நேரத்தில் பக்கத்தான் ஹரப்பான் ஓர் அறிவிப்பை வெளியிடும் என்றும் தியோ கூறினார்.

“அவருக்கு காத்திருக்க முடியாதென்றால், தி, நஜிப்பிடம் நாடாளுமன்றத்தை இப்போதே கலைக்கும்படி கேட்க வேண்டும். பின்னர், ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையை வெளிப்படுத்தும்.

“அதே நேரத்தில், மகாதிர், அன்வார் மற்றும் முகைதின் ஆகியோர் பிஎன் அரசாங்கத்தில் இல்லாததால், யுஇசி பிஎன்னால் எப்போது அங்கீகரிக்கப்படும் என்பதை தி எங்களுக்குச் சொல்ல வேண்டும்”, என்று தியோ மேலும் கூறினார்.