முக்காடு போட எனக்கு தடை விதித்திருக்கிறார் என் கணவர், சித்தி ஹஸ்மா கூறுகிறார்

 

தாம் முக்காடு அணிவதற்கு தமது கணவர் மகாதிர் முகமட் தடை விதித்திருக்கிறார் என்று டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி கூறினார்.

சில தங்கும் விடுதிகள் முக்காடு அணிவதற்கு விதித்துள்ள தடை குறித்து கேட்கப்பட்ட போது, அவர் இவ்வாறு கூறினார்.

“நீங்கள் தவறான நபரிடம் கேட்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் இன்றுவரையில் முக்காடு அணிந்ததில்லை.

“முக்காடு அணிவதற்கு எனது கணவர் எனக்கு தடை விதித்திருக்கிறார். ஒருவர் முக்காடு அணிவதற்கு முன்பு அவரது கணவரின் அனுமதியை அவர் பெற வேண்டும்.

“நான் மெக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு ஆசிர்வாதம் பெறுவதற்காக முக்காடு அணிய விரும்பினேன். அதற்காக, நான் முக்காடு அணிந்தேன் (ஆனால்) அவர் அவரது முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்”, என்று சித்தி ஹம்சா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, இன்று கோலாலம்பூரில் பெர்சத்துவின் மாதர் பிரிவு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

முக்காடு அணிவது தங்கும் விடுதிகளில் ஒரு பிரச்சனையாக உருவாகி இருப்பது குறித்து கேட்ட போது, இது ஒருவருக்கு வேலை வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பொருத்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் அவற்றின் தனிப்பட்ட விதிகளைக் கொண்டுள்ளன என்றாரவர்.

தங்கும் விடுதிகள் அவர்களுடைய தொழிலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் முக்காடு அணிய வேண்டியதற்கான இடங்கள் இருக்கின்றன என்று சித்தி ஹம்சா மேலும் கூறினார்.

தொழிலாளர்களுக்கு முக்கியமானது தொழிலியத்தைப் பின்பற்ற வேண்டியதாகும் என்று அச்செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பெர்சத்து மாதர் பிரிவுத் தலைவர் ரீனா ஹருண் கூறினார்.

முக்காடு அணிய வேண்டுமா, வேண்டாமா என்பதைவிட தொழில்துறைக்கு ஏற்றதைச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாரவர்.