பங் மொக்தாரின் ரிம2,000 டிக்கெட் கூற்று ‘முற்றிலும் உண்மையற்றது’, ஏர்ஏசியா கூறுகிறது

 

சாண்டாக்கானிலிருந்து கோலாலம்பூருக்கான ஒருவழிப் பயண டிக்கெட்டின் விலை ரிம2,000 என்று கின்னாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின் கூறிக்கொண்டதை ஏர்ஏசியா மறுத்துள்ளது.

எம்பி பங் மொக்தார் ராடினின் கூற்றில் உண்மை இல்லை என்று ஏர்ஏசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி ஐரின் ஒமார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அந்தப் பாதையில் ஒருவழிப் பயணத்திற்கு ரிம2,000 கட்டணம் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறிக்கொண்டதில் முற்றிலும் உண்மை இல்லை. கோலாலம்பூர்-சாண்டாக்கான் ஒருவழிப் பயணத்திற்கு சராசரி கட்டணம் ரிம213.

உச்சகட்ட காலத்தில்கூட, ஏர்ஏசியாவின் மிக உயர்ந்த கட்டணம் ஏறத்தாழ ரிம1,180தான். அதுவே சந்தையில் மிகக் குறைந்த கட்டணமாகும் என்று ஐரின் மேலும் கூறினார்.

ஏர்ஏசியாவில் ‘மறைத்து வைக்கப்பட்டுள்ள கட்டணங்கள்” பற்றி அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டையும் மறுத்த ஐரின், அவ்வாறான மறைத்து வைக்கப்பட்டுள்ள கட்டணங்கள் ஏதும் இல்லை என்றார்.

மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மலேசியாவில் விமான நிலையங்களுக்கிடையில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகளுக்கிடையிலான வேறுபாட்டைக் கண்டறியவும் பயணிகளின் கருத்துகளைக் கேட்டறியவும் வருமாறு ஏர்ஏசியா அவரை அழைக்கிறது என்றார் ஐரின்.

கடந்த புதன்கிழமை, ஏர்ஏசியா குழுமத்தின் தலைவர் டோனி பெர்னான்டெஸ் ஒரு பெயர் குறிப்பிடப்படாத “எம்பி” மீது அவரது எரிச்சலை சமூக ஊடகத்தில் அள்ளிக்கொட்டினார்.