மலேசியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், நாட்டு மக்களின் பொருளாதார நிலை மத்தியில் உள்ளது என, மெர்டேக்கா செண்டர் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுகிறது.
1,203 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 10-ல் ஒன்று அல்லது இரண்டு மலேசியர்கள், பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, உணவு தேவைகளைக் குறைத்து கொள்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக, மெர்டேக்கா செண்டர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயினும், ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட இதே கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், இம்முறை சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால், 15 விழுக்காட்டினர், தங்கள் வயிற்றைக் கட்டி, மற்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறியுள்ளனர், இது ஜனவரி மாதத்தைவிட 2% அதிகரித்துள்ளது.
ஐந்தில் ஒருவர், தனிநபர் கடன்கள் அல்லது கடன் அட்டைகளின் வடிவில் புதிய கடன்களை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள வேளையில், 11 விழுக்காட்டினர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
“15 விழுக்காட்டினர் குடும்ப உறவுகளில் இதனால் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 2017 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 2% அதிகரித்துள்ளது,” என ஆய்வு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 29 விழுக்காட்டினர் அவசரகாலத்தில் RM500 கூட கையில் இருப்பதில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். முந்தைய கணக்கெடுப்பைவிட இது 33% குறைந்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போது “மனச்சோர்வை” உணர்வதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 40 விழுக்காட்டினர், தங்களின் மின்சார, நீர் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, வாழ்க்கைச் செலவினங்களின் உயர்வு, பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியப் பொருளாதாரப் பிரச்சினைகளில் தான், அதிகமானோர் (72%) கவலை கொண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வு, நவம்பர் 4 –ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடந்தது.