இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நீண்ட நடைப்பயணத்தைத் தொடங்கினார் தியாகு

இருமொழி திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பை உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க, தனது நீண்ட நடைப்பயணத்தை, இன்று ஜொகூர் பாருவில் தொடங்கி உள்ளார் தியாகு.

அந்த 350 கிலோ மீட்டர் நடைப்பயணம், இன்று காலை, சுமார் 10 மணியளவில், ஜொகூர் பாரு தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியின் முன்புறம் வெற்றிகரமாகத் தொடங்கியது.

இளைஞர் தியாகுவிற்கு ஆதரவாக பல இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் தனிநபர்கள் வயது வித்தியாசமின்றி, பள்ளியின் முன் ஒன்றுகூடினர்.

மருந்தியல் பட்டதாரியான தியாகு, வயது 27, ஜொகூர்பாருவிலிருந்து புத்ராஜெயா வரையில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் 17 நாள்கள் தொடரவுள்ள இப்பயணத்தின் ஊடே, ஆங்காங்கே நடைபெறும் கவன ஈர்ப்பு கூட்டங்களில் தனது குறிக்கோளை மக்களிடையே விளக்கவுள்ளார் தியாகு.

“இந்த நடைப்பயணத்தை சிலர் ஆதரிக்கின்றனர், சிலர் தேவையற்ற நடவடிக்கை என்கின்றனர். எனக்கு இது ஒரு வேள்விப் பயணம். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று கத்தியபோதெல்லாம் இரவில் தூக்கம் வராது. அதன் தாக்கம்தான் இந்த முடிவுக்குக் காரணம்”, என்று கூறினார் தியாகு.

“இது தேவையற்ற வேலை, ஒருவர் நடந்துவிட்டால் மாற்றம் ஏற்பட்டுவிடுமா,” என்ற ஒருசிலரின் கேள்விக்கு, ‘மே 19’ ஆலோசகரும் வழக்கறிஞருமான கா.ஆறுமுகம், “இவர் ஒருவரின் நடைப்பயணம் நிச்சயம் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராதுதான், ஆனால், மக்கள் மத்தியில் இந்த இருமொழி திட்டம் பற்றிய செய்தியைக் கொண்டுசெல்லவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை,” என்றார்.

“வன்முறையில் இறங்காமல், நமது எதிர்ப்பைத் தெரிவிக்க இதுபோன்ற அமைதி நடவடிக்கைகள் சிறந்தவை,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைப்பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திருமதி கவிதா

கவிதா திருமாறன்

திருமாறன் தனது மகள் இந்த இருமொழி திட்டத்தில் பயில்வதாகவும், ஆங்கிலத்தில் இருப்பதால் சற்று கடினமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

“என் மகளுக்கு நான் வீட்டில் படித்துகொடுக்கவோ, வீட்டுப்பாடங்கள் சொல்லிக்கொடுக்கவோ மிகவும் சிரமப்படுகிறேன், குறிப்பாக கணிதப் பாடம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. பள்ளியில் இதைப் பற்றி பேசினால், உங்கள் மகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிடுங்கள் என்று, பள்ளி நிர்வாகம் சொல்கிறது, எங்களுக்கு இதுதான் அருகில் இருக்கும் தமிழ்ப்பள்ளி,” என்றார்.

“என் மூத்த மகன், தமிழ்வழி அறிவியல், கணிதம் படித்தபோது நான் இந்தச் சிரமங்களை எதிர்நோக்கவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆக, எனக்கு இந்த இருமொழி திட்டம் வேண்டாம். அதனால்தான், இன்று அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தேன்,” என்று தன் பிள்ளைகளுடன் வந்திருந்த கவிதா மேலும் கூறினார்.

இ.சில்வராஜா & நம்மவர்

“இந்த இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தை அழித்துவிடும். எனவே, இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம் எனும் ‘மே 19’ இயக்கத்தினரின் கோரிக்கை நியாயமானது. அதனால்தான் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று இங்கு வந்தேன்,” என்று தமிழர் களம் இயக்கத்தைச் சேர்ந்த நம்மவர் கூறினார்.

இதே கருத்தை, மலேசியத் தமிழ்நெறிக் கழக ஜொகூர் மாநிலப் பொறுப்பாளர் மாறன் தெரிவித்தார்.

“தமிழ்ப்பள்ளிகளில் அறிவியலும் கணிதமும் தமிழிலேயேக் கற்பிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.

“தமிழ்ப்பள்ளிகளில், தமிழ்மொழி, ஆங்கிலம், மலாய், அறிவியல் மற்றும் கணிதம் முக்கியப் பாடங்கள் ஆகும். ஆக, இவற்றுள் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் போதிக்க தொடங்கிவிட்டால், அதற்குத் தமிழ்ப்பள்ளி என்ற பெயர் எதற்கு?” என்று மலேசிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்த இ.சில்வராஜா கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, கடந்த புதன்கிழமை, இந்தப் பெருநடைக்கும் துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு இராஜூ போலிசில் புகார் செய்திருந்தார்.

இன்று காலை, நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்னர், போலிசார் இக்குழுவினரைச் சந்தித்து விளக்கம் பெற்றனர். ஏற்கனவே, இதற்காக போலிசில் விண்ணப்பம் செய்திருந்ததால், சிக்கல் ஏதுமின்றி இன்று இப்பயணம் இனிதே தொடங்கியது

இவ்வாண்டு சுமார் நாற்பது தமிழ்ப்பள்ளிகளில், டிஎல்பி எனப்படும் இருமொழி திட்டம் அமலாக்கம் கண்டது.  இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளிகள், அரசாங்கம் கோரிய வரையறைகளுக்கு உட்பட்டு இல்லாதபோதும், எப்படி இத்திட்டம் திணிக்கப்பட்டது என்று மே19 இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த மே19-ம் தேதி, தமிழ்க்கல்வி ஆதரவாளர்களுடன் இருமொழி திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து அகற்ற கோரி, ஒரு மாபெரும் கண்டன ஊர்வலத்தை மே19 இயக்கத்தினர் நடத்தியது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியப் பங்குவகித்தவர்களில் தியாகுவும் ஒருவர்.

தியாகுவின் இந்த வேள்விப்பயணம், டிசம்பர், 11-ம் தேதி புத்ராஜெயாவில் முடிவுரும்.

இன்றிரவு, கூலாயில் தங்கியிருக்கும் இவர்களின் பயணம், நாளை அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாலமுரளி தெரிவித்தார்.

–  ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்