மைடாப்தார் சிவ சுப்ரமணியம் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்

 

சிவ சுப்ரமணியம், மைடாப்தார் சிறப்பு அமலாக்கப் பணிப்படை ஒருங்கிணைப்பாளர், அம்னோ தலைமையிலான பிஎன் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறவர் என்று எதிர்தரப்பினரின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

அரசாங்கம் “இந்தியர்களின் நாடற்ற பிரச்சனையைத் தீர்ப்பதில் மனமார்ந்த நிலையைக் கொண்டிருக்கிறது, ஆனால் அப்பணியைச் செய்வதற்கு பணிக்கப்பட்டவர்கள் துப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்”, என்று சிவ சுப்ரமணியம் கூறியிருந்ததை பினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி கடுமையாகச் சாடினார்.

“தனிச் சிறப்புமிக்க வக்காலத்து வாங்குகிறவர் இங்கிருக்கிறார்”, என்று மலேசியகினியிடம் கூறிய இராமசாமி, “அம்னோவுக்கு வக்காலத்து வாங்குகிறவாராக இருப்பதை அவரால் நிறுத்திக் கொள்ள முடியுமா?

“இந்தியர்களின் நாடற்ற பிரச்சனையை ஏன் தீர்க்க முடியாது என்பதற்கான காரணம் அந்தப் பிரச்சனையைக் கையாள்வதற்கான அரசியல் திண்மை பிஎன் அரசாங்கத்திடம் சற்றும் கிடையாது.

“தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேசியப் பதிவு இலாகவில் (என்ஆர்டி) அடைகாத்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பணியைச் செய்ய பணிக்கப்பட்டவர்களை ஏன் குறைகூற வேண்டும்”, எறு இராமசாமி வினவினார்.

2013 ஆம் ஆண்டில், பினாங்கு நாடற்றவர்களுக்கான பினாங்கு பணிப்படையை நிறுவிய இராமசாமி, குடியுரிமை மற்றும் அடையாள அட்டைகளுக்காக 600 மனுக்களை என்ஆர்டியிடம் தாக்கல் செய்திருந்தார். அதில் அடைந்த வெற்றியின் அளவு நடுக்கத்தை அளிக்கும் என்றாரவர்.

“இது வரையில் 50 மனுக்கள்தான் வெற்றி கண்டன. இது யாருடையப் பிரச்சனை? இப்பிரச்சனை என்ஆர்டி சார்ந்தது என்பது தெளிவாகிறது.

“நேர்மாறாக, மைடாப்தார் வெறும் பொதுஉறவு நடவடிக்கை சம்பந்தப்பட்டது; அது நாடற்றவர் பிரச்சனையைத் தீவிரமாக கையாள்வதில்லை’, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

நாடற்ற இந்தியர்களின் நாடற்ற நிலைக்குத் தீர்வு காண உதவுவதற்காக பிரதமர் நஜிப் ரசாக்கின் நல்லாசியுடன் மைடாப்தார் அமைக்கப்பட்டது.

கடந்த மாதம், சுமார் 300,000 மலேசிய இந்தியர்கள் குடியிரிமை பத்திரங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எதிரணியினர் கூறிக்கொள்வதை பிரதமர் நஜிப் “பொய்” என்று வர்ணித்தார், ஏனென்றால் குடியுரிமைக்காக 2,500 மனுக்கள் மட்டுமே மலேசிய இந்தியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

ஆனால், 300,000 நாடற்றவர்கள் மலேசியாவில் இருக்கின்றனர் என்று இராமசாமி திடமாகக் கூறினார்.

“நான் சொல்வது தவறு என்று நிரூபியுங்கள். நாடாற்றவர்களின் சரியான எண்ணிக்கையை எனக்குக் கூற முடியுமா?, என்று அவர் கோரினார்.

எதிரணியினர் அவர்களுடைய வேலையைச் செய்யாமல், அவர்களுக்கிடையே சண்டைபிடித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் அரசியல் ஆட்டத்தால் மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் சிவ சுப்ரமணியம் அவர்களைச் சாடினார்.

“யார் சலித்துப் போனது, இங்கு எல்லாம் அரசியல்”, என்று இராமசாமி திருப்பியடித்தார்.

மலேசிய இந்தியர்களின் நாடற்ற பிரச்சனைக்கு அவர்கள் மீதே பழி போடுவது பயனற்றதோடு நியாயமற்றதுமாகும் என்று பிகேஆர் பாடங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.

“சிவா போன்றவர்கள் பெற்றோர்களின் எழுத்தறிவு திறமை மற்றும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளைப் பதிவு செய்யத் தவறியது போன்றவற்றுக்காக அவர்கள் மீது பழி போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதோடு தவறானதுமாகும். இந்தப் பிரச்சனைகள் ஏன் நாடற்றதன்மை தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதற்கு விளக்கம் அளிக்கவில்லை”, என்றாரவர்.

பல வருடங்களாக இந்த நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை எதிர்கொள்ளப்பட்டிருந்த போதிலும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நாடுதழுவிய அளவில் என்ஆர்டி அல்லது உள்துறை அமைச்சு எந்த ஒரு தீவிர முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.

“நாடற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இருக்கும் இடம் ஆகியவை குறித்த கணிப்பு எதனையும் தேசிய அளவில் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

“மாறாக, பிஎன் தலைவர்கள் இப்பிரச்சனையை மஇகா தொடர்புள்ள அரசுசாரா அமைப்புகள், மைடாப்தார் மற்றும் இதர அமைப்புகளிடம் தள்ளிவிடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவை இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் மிகச் சிறிய முன்னேற்றமே கண்டுள்ளன”, என்று அவர் மேலும் கூறினார்.