அம்னோவின் சேவைகளை நினைவில் நிறுத்தி, தங்களைப் பிரதிபலிக்குமாறு, அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னன் தெங்கு மன்சோர், மலாய்க்காரப் பிள்ளைகளுக்கு நினைவுபடுத்தினார்.
தெங்கு அட்னானின் கூற்றுப்படி, கல்வி வாய்ப்புகளை வழங்கிய அம்னோவின் சேவையை மலாய் மாணவர்கள் பாராட்ட வேண்டும்.
“நான் ஒரு மாணவனாக இருந்துள்ளேன், (ஆனால்) நீங்கள் அம்னோ கொள்கைகளின் காரணமாக பல்கலைக்கழகத்திற்குள் வர முடிந்தது. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காதவர்களை, வெளிநாட்டிற்கு அனுப்பினோம், (ஆனால்) நாடு திரும்பியதும், மிகவும் கெட்டிக்காரத் தனமாக, அம்னோவையேக் குறை சொல்கிறீர்கள்.
“அம்னோ என்ன தவறு செய்தது? வீடு திரும்பியதும் சிந்தித்துப் பாருங்கள், நான் யார், என் பெற்றோர்கள் யார், நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன். யோசித்து பாருங்கள், காரணம் நீங்கள் அதனை மறந்துவிட்டீர்கள், ஏனெனில் நாம் முஸ்லிம்களாக இருந்தும், நம்மிடம் இருப்பதற்கு நாம் நன்றி செலுத்த மறந்துவிட்டோம்,” என்று இன்று புத்ரா உலக வாணிப மையத்தில், ‘நாடி நெகாரா’ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த தெங்கு அட்னான் தனது உரையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர், அம்னோ- பிஎன் அரசு நாட்டை முறையாக நிர்வகிக்க தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
“எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே நாட்டைப் பிரிக்க பார்க்கின்றனர், நாட்டை வேண்டுமென்றே அழிக்கப் பார்க்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
மலாய் இனத்தின் நலனையும் அவர்களின் சிறப்பு சலுகைகளையும் தொடர்ந்து பராமரிக்க, அம்னோவின் சக்தியை நிலைநிறுத்த வேண்டும் என்று அட்னான் வலியுறுத்தினார்.
இதுநாள்வரை, மலாய்க்காரர்களின் உரிமைகளையும் சிறப்பு சலுகைகளையும் கட்டிக்காத்து, அம்னோ தன் நிர்வாகத் திறனை நிரூபித்துள்ளது.
“நாங்கள் ஒரு சரியான அரசாங்கம் என்று கூறவில்லை, ஆனால், இன்று இருக்கும் தலைமைத்துவத்தை நம்புங்கள், நஜிப் அனைத்தையும் மாற்றி, திருத்தியமைக்க தயாராக இருக்கிறார்,” என்றார் அவர்.
அரசாங்கம் உங்களுக்குக் கல்வி வழங்கியுள்ளது, பட்டம் பெற்ற பின்னர், அந்த அரசாங்கத்தையே விமர்சிப்பது நியாயமற்றது என்று தெங்கு அட்னான் தெரிவித்தார்.
“படித்து பட்டம் பெற்று, வேலைக்குச் சென்றபின் அரசாங்கத்தைக் குறைகூறாதீர்கள்,” என்று அவர் மலாய் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.