சீனப் புத்தாண்டிற்குப் பின்னர் 14 ஆவது பொதுத் தேர்தலா? ஸாகிட் கோடிகாட்டுகிறார்

 

அடுத்த ஆண்டில் சீனப் புத்தாண்டு முடிந்த சில நாட்களுக்குள் 14 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கோடிகாட்டினார்.

பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான ஸாகிட், ஹூத்தான் மெலிந்தாங்கில் தியோ பூ கியோங் கோயிலை இன்று காலையில் திறந்து வைத்து பேசுகையில்  அவர் இவ்வாறு கூறினார்.

“மறந்து விடாதீர்கள் நமது பெரிய நாள் வரும். சீனப் புத்தாண்டுக்குப் பிறகு இன்னொரு பெரிய நாள் இருக்கிறது. முன்பு வாக்காளர்கள் தவறு செய்திருந்தால் அது ஓகே, நான் மன்னித்து விடுகிறேன். முடிந்தால், அதே தவறை மீண்டும் செய்யாதீர்”, என்று ஸாகிட் கூறினார்.

சீனப் புத்தாண்டு அடுத்த ஆண்டு பெப்ரவரி 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் கொண்டாடப்படும். நாடாளுமன்றம் ஜூன் 26, 2018 இல் கலைக்கப்படும். அன்றைய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் 14 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் நிலவும் சமயச் சுதந்திரம் பற்றியும் பேசிய ஸாகிட், மக்கள் அனுபவிக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு அது பங்களிப்புச் செய்துள்ளது என்றார்.

“பரிவுமிக்க மலேசிய அரசாங்கம் சமயங்களுக்கிடையிலான வேறுபாடுகளை அறிந்துள்ளது. நமது அரசமைப்புச் சட்டம் இஸ்லாம் பெடரேசனின் சமயம் என்று கூறியிருக்கிற போதிலும், முஸ்லிம்-அல்லாதவர்கள் அவரவர்களுடைய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தைப் பெற்றிருக்கின்றனர்.

“இது அரசாங்கம் நியாயமானது மற்றும் நாட்டிலுள்ள அனைத்து சமயங்களையும் மதிக்கிறது என்பதாகும், ஏனென்றால் இதர சமயங்களை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்களுக்குப் போதிக்கிறது”, என்று ஸாகிட் மேலும் கூறினார்.