இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – தியாகுவின் நடைப்பயணத்தின் இரண்டாம் நாள்

இன்று, நவம்பர் 26, அதிகாலை சுமார் 4.30 மணியளவில், தாமான் செனாய் உத்தாமாவில் தொடங்கிய அவரின் பயணம் காலை 11 மணியளவில் புக்கிட் பாத்து வந்தடைந்ததாக தியாகு தெரிவித்தார்.

வரும்வழியில், பலர் இந்த நடைப்பயணத்தின் காரணத்தைக் கேட்டறிந்ததாகவும், தங்களின் ஆதரவை வழங்கியதாகவும் தியாகு கூறினார்.

“நிறைய பேர் தங்களின் ஆதரவை எனக்கு தெரிவித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, சில மலாய் , சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்,” என்று தியாகு சொன்னார்.

நம் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் தமிழ்ப்பள்ளியில், இந்த இருமொழி திட்டம் அமல்படுத்தப்படுகிறதா என்பதனையும், பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்து விவரம் அறியவும்  என்று அவர் இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.

“இருமொழி திட்டம், தமிழ்ப்பள்ளிகளில் பின்வாசல் வழியாக உள்ளே நுழைகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்கு நீங்கள் அப்பள்ளியில் பயிலும் பிள்ளையின் பெற்றோராகதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”, என தியாகு தெரிவித்தார்.

“பெற்றோர்கள் அப்பள்ளியில் வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்புடையவர்கள், ஆனால், சமுதாயம் அப்படி அல்ல. ஒரு பள்ளியின் அருகில் இருக்கும் சமுதாயம்தான் அப்பள்ளியின் நிரந்தரப் பாதுகாப்பு. எனவே, ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்க வேண்டும்”, எனவும் தியாகு மேலும் கூறினார்.

“முடிந்தவரை அப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் பேசி, இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளியில் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள்”, என்றும் அவர் இந்திய சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.

இன்றிரவு, புக்கிட் பாத்து அருகே உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் நிலையத்தின் அருகே அவர் தங்கவுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், நாளை அதிகாலை 4.30 மணிக்கு அவரின் பயணம் தொடரும். சிம்பாங் ரெங்கம், புக்கிட் கெரமோயாங் ஓய்விடத்தில் நாளை இரவு அவர் ஓய்வெடுப்பார். சுற்றுவட்டார தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி ஆர்வளர்கள் நாளை மாலை 5 மணிக்கு மேல்  அவரை அங்குச் சந்திக்கலாம்.

-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்