எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றால், மலேசியர்களுக்கான சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையைப் பக்காத்தான் ஹராப்பான் தீர்க்கும் என்று முகமட் சாபு வாக்குறுதியளிக்கிறார்.
மலேசியாவில் பிறந்திருந்தவர்கள் அல்லது நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து வருபவர்கள், குறிப்பாக இந்தியர்கள் இந்தச் சிவப்பு அடையாள அட்டை பிரச்சனைகளை எதிர்கொள்வதாக அமானா தலைவரனா அவர் தெரிவித்தார்.
“என்னைச் சந்தித்த சிலர், என்னிடம் புகார் கூறியுள்ளனர். நான் இன்னும் அமைச்சர் ஆகவில்லை, அதற்குள் புகார் செய்யப்பட்டுவிட்டது. அதில் ஒன்றுதான் இந்த சிவப்பு அடையாள அட்டை. எனக்கு வயது 60 ஆகிவிட்டது. என் பிள்ளைகள் , பேரப் பிள்ளைகள் எல்லாம் இங்கேதான் இருக்கிறார்கள் என்று ஒருவர் என்னிடம் சொன்னார்,” என்று நேற்று இரவு, ஹிண்ராப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு நாளில் பேசிய மாட் சாபு தெரிவித்தார்.
மலேசியக் குடிமக்களுக்கு, நீல அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதில், பிஎன் மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முயற்சிகள் குறித்து மாட் சாபு கேள்வி எழுப்பினார், அதே நேரத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சிலர் அதனை மிக எளிதாக பெற்றுவிடுவதையும் அவர் குறிப்பிட்டார்.
“நமக்கு என்ன ஆச்சரியம் என்றால், நாம் அடையாள அட்டையைப் பெற மிகவும் சிரமப்படுகிறோம். ஆனால், சபாவில், சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர் சபாவிற்கு வந்து சேருவதற்கு முன், அடையாள அட்டை வந்துவிடுகிறது. அது வித்தியாசம் பின் விந்தை-ஆக உள்ளது.
“கிராமத்தில் கம்பளம், விரிப்புகள் விற்கும் வெளிநாட்டுக்காரர்களுக்குக்கூட நீல அடையாள அட்டை உள்ளது. நீங்கள் (இந்தியர்கள்) இங்கு 50 முதல் 60 வயது வரை வாழ்ந்து வந்தபோதும், சிவப்பு அடையாள அட்டைதான் இன்னும் உள்ளது. மஇகா என்ன செய்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று மாட் சாபு மேலும் கூறினார்.