ஜொகூர் பி.என்.-னுக்கான மலிவுவிலை வீடு ஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்

ஜொகூர் மாநிலத்தின் மலிவுவிலை வீடுகள் விண்ணப்பத்தில், அரசு செங்குத்து ஒதுக்கீடு திட்டத்தை (கே.எம்.கே) அகற்ற வேண்டும் என மாநில எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவரான கான் பெக் சேங், கே.எம்.கே. மலிவுவிலை வீடுகள் ஒதுக்கீடு பி.என்.-னுக்கு மட்டுமே என்றார்.

அத்திட்டத்தின் கீழ், பல மலிவுவிலை வீடுகள், மாநில தேசிய முன்னணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, அவற்றிற்கு விண்ணப்பம் செய்ய மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் தேவைப்படுகிறது.

“ஜொகூரில், கே.எம்.கே. திட்டத்தின் கீழ் இவ்வீடுகளை விநியோகிப்பதால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டுள்ளதா? அரசியல் கட்சிகளின் வழி அவை விநியோகிக்கப்படுவதால், மத்தியஸ்தர்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்குதான் அது நன்மையாக இருக்கிறது.

“இந்த அமைப்பு முறை, கட்சி அல்லது அரசியல்வாதிகளுடன் தொடர்பில்லாத சாதாரண மக்களுக்கு நியாயமானதா?” என, நேற்று ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில், 2018-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போதான தனதுரையில் அவர் கூறினார்.

எனவே, ஊழலுக்கு வழிவகுக்கும் அத்திட்டத்தை அகற்ற வேண்டுமென ஜொகூர் எதிர்க்கட்சி விரும்புவதாக, பெங்கெராம் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

அவ்வீடுகளுக்கான 119,696 விண்ணப்பங்களில், 8.16% அல்லது 9,773 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாக கான் கூறினார்.

அவற்றில் பாதிக்கும் மேல், அதாவது 4,988 விண்ணப்பங்கள் கே.எம்.கே. திட்டத்தின் வழி பி.என். மூலமாக கிடைத்தவை.

2009-ஆம் ஆண்டு முதல், மாநில எதிர்க்கட்சி இந்த பிரச்சினையை எழுப்பியுள்ள போதும், ஜொகூர் அரசாங்கம் இதனை உறுதியாக ஆதரித்து வருகிறது.

2014- ஆம் ஆண்டில், 30% மலிவுவிலை வீடுகள் பி.என்.-னுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, மற்றவை மாநில அரசாங்கத்தின் கீழ் இருந்தன என்று கான் கூறினார்.

அவற்றில், 60% அம்னோவுக்கும், 25% மசீசவுக்கும், 15% மஇகாவுக்கும் ஒதுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மே 2015-ல், இத்திட்டம் தொடரும் என்று  ஜொகூர் உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லாதிஃப் பாண்டி கூறியதைப் பெர்னாமா மேற்கோள்காட்டியுள்ளது.

“இது தற்போது இருக்கும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. கே.எம்.கே. திட்டத்தின் கீழ், சமூகத் தலைவர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, எங்களுக்கு உதவுபவர்களுக்கு நாங்கள் இடம் தருகிறோம்,” என அவர் கூறியுள்ளார்.