நாட்டின் பொருளாதாரத்தில், 1எம்டிபி பிரச்சனையின் தாக்கம் மிகக் குறைவு

அரசுக்குச் சொந்தமான 1எம்டிபி நிறுவனத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் மிகவும் நன்றாக நடைபெறுவதால், நாட்டின் பொருளாதாரத்தில் 1எம்டிபி-இன் பாதிப்பு மிகக் குறைவாகவே இருப்பதாக அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

நவம்பர் 23-ம் தேதியிட்ட நாடாளுமன்ற விவாதத்தில், 1எம்டிபி விவகாரங்கள் வெளிநாட்டு நேரடி முதலீடு (ஃப்டிஐ) செல்வாக்கைப் பாதிக்கவில்லை என்றும், அவர்கள் இன்னும் மலேசியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்த உண்மை அமெரிக்க முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களால் மிகவும் தெளிவாக அறியப்பட்டுள்ளதோடு, அவர்கள் இதுகுறித்து எந்தவொரு சர்ச்சையையும் உண்டாக்கவில்லை,” என்று நிதி அமைச்சு, ரேய்மி உங்கி-யின் (பிஎன் – தெனோம்) வினாவிற்குப் பதிலளித்தது.

முன்னதாக, அமெரிக்க முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரிடமிருந்து, ‘1எம்டிபி நாசவேலை பிரச்சாரம்’ தொடர்பான அவர்களின்  கருத்துகள் மற்றும் மலேசியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் பற்றி நிதி அமைச்சு விளக்கமளிக்க வேண்டுமென்று, ரேய்மி கேட்டுக் கொண்டார்.

“அப்பிரச்சாரம், மலேசியப் பொருளாதாரத்தில் முதலீட்டாளர் நம்பிக்கையைக் குறைத்து,  1எம்டிபி- ஐத் திட்டமிட்டு தகர்த்தெறிவதற்கானது என்று அமெரிக்க வர்த்தக சமூகத்திற்குப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

“அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட, தோல்விகண்ட  முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“உண்மை என்னவென்றால், நாட்டின் பொருளாதாரத்தில் 1எம்டிபி பிரச்சினையின் தாக்கம் மிகவும் குறைவு, காரணம் அந்நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டங்கள் சரியாக வேலை செய்கின்றன.

“உண்மையில், மலேசியப் பொருளாதாரம் உலக வங்கியால் அறிவிக்கப்பட்ட சர்வதேச சராசரியை விட, வேகமாக வளரும்,” என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.