எஸ். நல்லா : இந்தியர்களின் ஆதரவோடு, நஜிப் பெரும் வெற்றி அடைவார்

எதிர்வரும் 14- வது பொதுத் தேர்தலில், இந்திய சமூகத்தின் ஆதரவோடு பிரதமர் நஜிப் இரசாக் பெரும் வெற்றியைப் பெறுவார் என்று செனட்டர் எஸ் நல்லகருப்பன் கூறினார்.

மலேசிய இந்திய ஐக்கிய முற்போக்குக் கட்சியின் (மியூப்) தலைவரான அவரின் கூற்றை மேற்கோள் காட்டிய தமிழ் மலர் நாளிதழ், இதுவரையிலும் நஜிப் மட்டுமே நாட்டின் சிறந்த பிரதமர் என்று இந்திய சமூகம் உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.

“(முன்னாள் பிரதமர்) மகாதீர் தெருவில் இறங்கி, நஜிப்பைக் கேவலப்படுத்தினார், அதிலிருந்து அவரை (மகாதீரை) ‘துன்’ என்று அழைப்பதைக் கூட மக்கள் வெறுத்தனர்.

“நாட்டை நிர்வகித்தபோது இந்தியர்களுக்கு மகாதீர் என்ன செய்தார்? நினைத்து பாருங்கள். நஜிப்பை விமர்சிப்பதற்கு மகாதீர் தகுதியற்றவர்.

“அதிகாரத்தில் இருந்தபோது ஒன்றுமே செய்யாத ஒரு மனிதர் (இந்திய சமுதாயத்திற்காக), இப்போது அச்சமூகத்திற்கு எப்படி நல்லது செய்வார்?

“இந்தியர்கள் கேட்கும் எதையும் கொடுக்கும் நஜிப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள்,” என்று பேராக், ஊத்தான் மெலிந்தாங்கில், தீபாவளி இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட நல்லக்கருப்பன் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில், இந்தியர் வாக்குகளைப் பிஎன் வெல்ல முடியாமல் போனது, என்பதை ஒப்புக்கொண்ட நல்லக்கருப்பன், இந்திய சமூகம் அந்தத் தவற்றிலிருந்து கற்றுக்கொண்டது என்றார்.

“இந்தத் தேர்தலில், இந்தியர்கள் பிஎன்-க்கு வாக்களிக்க உறுதியளித்திருக்கிறார்கள், இதுவரை இருந்த பிரதமர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டால், அதிகமானவர்கள் நஜிப்பை ஆதரிப்பதாக உங்களுக்கு அறிவிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

நல்லக்கருப்பன், டென்னிஸ் விளையாட்டில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிமுடன் கைக்கோர்த்தவர் ஆவார்.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டாம் என்று நல்லக்கருப்பனிடம் அன்வார் கூறியதால், அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே 2007-ல், அவர் பிகேஆரை விட்டு வெளியேறி, புதியக் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.