போலியான என்ஆர்டி பாரங்கள், ஸாகிட் விசாரிக்க வேண்டும்

 

தேசிய பதிவு இலாகாவின் (என்ஆர்டி) சின்னத்தைக் கொண்ட போலியான பாரங்கள் நாடற்றவர்கள் பயன்படுத்துவதற்காக வெளியாகியுள்ளதற்கு எதிராக பினாங்கில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வைரல் ஆகியுள்ள அந்தப் போலியான பாரங்கள் மலேசிய தேசிய அடையாள அட்டைக்கு (என்ஆர்ஐசி) மனு செய்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு வாக்களிக்க வேண்டும், இல்லையேல் அவர்களது என்ஆர்ஐசி ரத்து செய்யப்படும் என்று கூறுகிறது.

பினாங்கு, ஜாலான் பட்டாணியிலுள்ள நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பிகேஆர் நாடற்றவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எ. குமரேசன் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாகிட் ஹமிட் இச்சூழ்சிலையைச் சீர்[படுத்த வேண்டும் என்றார்.

இது போலியானது என்று தெரிந்திருந்த போதிலும் அஹமட் ஸாகிட் இதனை முழுமையாக விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும், ஏனென்றால் இந்த பாரங்களில் என்ஆர்டியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநகர்மன்ற உறுப்பினரான குமரேசன் கூறினார்.

இந்த பாரம் போலியானது என்று என்ஆர்டி கூறியிருந்த போதிலும், மக்கள் குழப்பமடைவதைத் தவிர்ப்பதற்கு இதன் பின்னிருக்கும் அரசியல் நோக்கம் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பொறுப்பற்ற தரப்பினர் தங்களுடைய சுயநலத்திற்காக இந்த போலியான பாரங்களைப் பயன்படுத்திக் கொள்வர் என்று தாங்கள் அஞ்சுவதாக குமரேசன் மேலும் கூறினார்.