இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் மூன்றாம் நாள்

நவம்பர் 27, 2017 – இன்று அதிகாலை, சரியாக 4.30 மணியளவில், புக்கிட் பாத்து ஷெல் நிலையத்திலிருந்து தியாகு தன் வேள்விப் பயணத்தைத் தொடங்கினார். அவருக்குத் துணையாக தமிழ் இனியன் மற்றும் கௌதமன் தங்கள் மகிழுந்தில் உடன்சென்றனர்.

பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில், மழை பெய்யத் தொடங்கிவிட்டதாக தியாகு தெரிவித்தார்.

“ஒரு 10 அல்லது 15 கிலோ மீட்டர்தான் நடந்திருப்போம் அதற்குள் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், நாங்கள் மழை அங்கி அணிந்து எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்”, என்றார் இளைஞர் தியாகு.

அடுத்த 10 கிலோமீட்டர் தூரம் கடந்ததும், சௌதர்ன் மலேய் தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் கண்டதாக அவர் தெரிவித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் இல்லாததால், அவரைத் தொலைபேசி வழி, தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும், ஆனால், தொடர்பு கிடைக்காததால், பள்ளியின் உள்ளே செல்லாமல், தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

“சிறிது நேரத்தில், எங்களை மீண்டும் தொடர்புகொண்ட பள்ளியின் தலைமையாசிரியர், எங்களை சந்திக்க விரும்பினார். எங்கள் நடைப்பயணத்தின் நோக்கத்தைக் கேட்டறிந்து வாழ்த்து கூறினார்”, என்று தியாகு தெரிவித்தார்

சுற்றுவட்டாரத்தில் இன்னும் சில தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாக தலைமையாசிரியர் தெரிவித்ததாக தியாகு தெரிவித்தார்.

“தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில், யூபிஎஸ்ஆரில் எத்தனை மாணவர்கள் ‘ஏ’ எடுத்தனர் என்பதைவிட அனைத்து மாணவர்களின் முழுத்தேர்ச்சிதான் முக்கியம் என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்,” என்றார் தியாகு.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யூபிஎஸ்ஆரில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத நிலையில், இவ்வாண்டு அப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றதைப் பெருமையுடன் அவர் பகிர்ந்து கொண்டதாகவும் தியாகு தெரிவித்தார்.

சுற்றுவட்டாரத் தமிழ்ப்பள்ளிகளில், தோட்டத் துண்டாடல்களால், மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்ததாக உடன்சென்ற தமிழ் இனியன் தெரிவித்தார்.

அப்பள்ளிகளை இந்தியர் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு மாற்றினால், மாணவர் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது எனத் தலைமையாசிரியர் ஆலோசனை கூறியதாக இனியன் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினாலே தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலைத்துவிடும். ஆனால், இங்குதான் பாதிக்கும் மேற்பட்ட இந்தியப் பிள்ளைகள் தேசிய மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனரே என்று அவர் ஆதங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் அரை மணி நேர உரையாடலுக்குப் பின், தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் கனத்த மழை பெய்து, அவர்களின் பயணத்தைத் தடைசெய்துவிட்டதாக கௌதமன் தெரிவித்தார்.

ஆக, சிறிது நேரம் அங்கேயே ஓய்வெடுத்து, மதிய உணவுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

மதியம் 12 மணியளவில், சிம்பாங் ரெங்கம் நகரை அவர்கள் அடைந்துள்ளனர்.

இன்றிரவு, கெரமோயாங் ஓய்விடத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். நாளை அதிகாலை மீண்டும் அவர்களின் பயணம் தொடரும்.

மேலும், இன்றிரவு நேரலையில், சிம்பாங் ரெங்கம் ஓய்விடத்தில் அவர்கள் அனுசரிக்கவிருக்கும் ‘மாவீரர் நினைவேந்தல்’ நிகழ்ச்சி குறித்து, சுமார் 8.30 மணியளவில் தியாகு பேசவுள்ளார்.

-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்