வான் அஸிசா: ஜாசா தலைவருக்கு மாதம் ரிம20,000 சம்பளமா?

 

சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா)வின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸர்ஹாசி மாதம் ரிம20,000 க்கு மேல் சம்பளம் பெறுகிறார். இந்த அளவுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அடிப்படைக்கோட்பாடு ஏதேனும் உண்டா என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் வினவினார்.

ஜாசா, தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சின் ஓர் இலாகா. அந்த அமைச்சரின் மாதச் சம்பளம் ரிம14, 907. ஆனால், அந்த அமைச்சில் ஓர் இலாகவின் தலைமை இயக்குனர் அமைச்சரைவிட கூடுதல் சம்பளம் பெறுகிறார் என்று வான் அஸிசா இன்று நாடாளுமன்ற மக்களவையில் கூறினார்.

பணியாளர்கள் பட்டியல் 2018 இன் கீழ் ஜாசாவின் தலைமை இயக்குனர் மாதத்திற்கு ரிம20,592 சம்பளம் பெறுகிறார். அது அமைச்சரின் சம்பளத்தைவிடக் கூடுதல் ஆகும்.

ஜாசாவில் மொத்தம் 272 பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ரிம12.8 மில்லியன் சம்பளம் கொடுக்கப்படும். ஜாசா, அம்னோ-பிஎன்னுக்கு வெறும் பரப்புரை செய்யும் அமைப்பாக இருக்கையில் இவ்வளவு ஊதியம் கொடுப்பதற்கான அடிப்படைக்கோட்பாடு என்ன என்று அவர் கேட்டார்.

அமைச்சர் மற்றும் பல ஆண்டுகள் சேவையாற்றிய அரசு ஊழியர்களைவிட ஜாசா தலைவருக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பதற்கான தேவை என்ன என்று அவர் மேலும் வினவினார்.

“அவர்களின் (ஜாசா பணியாளர்களின்) சம்பளத்தை பொதுப் பணத்திலிருந்து கொடுப்பதற்கு மாறாக நேரடியாக அம்னோ மற்றும் பாரிசான் தலைமையகம் கொடுக்க வேண்டும்”, என்று வான் அஸிசா கூறினார்.

அந்த அமைச்சுக்கான பட்ஜெட் 2018 விவாதத்தில் முடிவுரை ஆற்றிய துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி, ஜாசா தலைமை இயக்குனரின் சம்பளம் நிதி அமைச்சால் நிர்ணயிக்கப்பட்டது. அதுவும்கூட அவரை அப்பதவியில் பொதுச் சேவை ஆணையம் நியமிப்பதற்கு முன்பே நிதி அமைச்சு முடிசெய்தது என்றாரவர்.