ஜமாலின் இலவச உணவை நஜிப் சுவைத்தார்

இன்று, தலைநகரில் இருக்கும் அம்னோ தலைவர் ஜாமால் முகமட் யூனுஸ்சின் உணவகத்தில், பிரதமர் நஜிப் இரசாக் இலவச மதிய உணவைச் சுவைத்தார்.

அந்த உணவகத்திற்கு அவர் சென்றது மற்றும் மக்களோடு அவர் அளவலாவிய படங்கள், பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஜாலான் பஹாங்கில் உள்ள அந்த உணவகத்தில், நஜிப் வாடிக்கையாளர்களுடன் கைக்குழுக்குவது போலவும், அவர்களுக்கு பறிமாறுவது போலவும், உணவுகளைச் சுவைப்பது போலவும் படங்கள் வெளியாகி உள்ளன.

உணவகத்தின் உரிமையாளரான ஜமால், நஜிப்பை வரவேற்றார்.

கடந்த அக்டோபர் 16 தொடக்கம், 1மலேசியா இயக்கங்களின் கூட்டணி உணவகத்தின் வழி, வேலை நாட்களில்  ஜமால் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

அனைத்து மலேசியர்களுக்கும் இந்த உணவகத்தில் உணவு இலவசம், வாடிக்கையாளர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டைத் தாங்களே கழுவி வைக்க வேண்டும்.

அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் மக்களுக்குச் சுமையாக உள்ளது எனப் புகார்கள் வந்தபோது, இந்த உணவகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னதாக, மீன் விற்பனையில் நடுநிலையாளரைத் தவிர்ப்பதன் மூலம், மலிவான விலையில் மீன் விற்கலாம் என ஜமால் கூறியிருந்தார்.