உயரடுக்கு மலாய்க்காரர்கள், ஏழை மலாய்க்காரர்களைக் குறைத்து மதிப்பிடுதல், உதவி வழங்கும் துறைகளைத் தனியார்மயமாக்கல் மற்றும் வேலைவாய்பின்மை போன்றவற்றால், மலேசியக் கிராமப்புறங்களில் வறுமை இன்னும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த 2014 தொடக்கம், தனது கட்சி மேற்கொண்டுவரும் ஆய்வின் அடிப்படையில், வர்க்க அணுகுமுறையில் கிராமப்புற மலாய்க்காரர்களிடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு, உயரடுக்கு மலாய்க்காரர்கள்தான் காரணம் என்று மலேசியச் சோசலிசக் கட்சியின் சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் தே. மைக்கேல் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
“மலாய்க்காரர்கள் வர்க்க அடிப்படையில் வேறுபடுகிறார்கள். மேல்தட்டு மக்கள் ஏழைகளைக் குறைமதிப்பிட்டு, பலவீனப்படுத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.
“ஒவ்வொரு துறையிலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உள்ளன. பின்னர், மக்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? இதில்தான் எங்கள் கவனம் உள்ளது. கிராமப்புற மக்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள்,” என்றார் அவர்.
நேற்று காலை, ‘கிராமப்புற வறுமை மற்றும் ஏழைகளின் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகள்’ எனும் இடைக்கால அறிக்கை ஒன்றினை, பி.எஸ்.எம். தலைமையகத்தில் வெளியீடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேளாந்துறைக்கு வழங்கப்பட்ட பல்வேறு உதவிகள், எவ்வாறு குத்தகை முறைக்கு மாறியது என்பது குறித்து விரிவாக அவர் விளக்கினார்.
“ரிம 400 மில்லியன் உதவி தேவைப்படும், 180,000 விவசாயிகள் உள்ளனர். இதற்கு முன்னர், உரங்கள் தேசிய நெல் மற்றும் அரிசி வாரியத்தினால் (எல்பிஎன்) வழங்கப்பட்டது.
“விவசாயிகளுக்கு உரம் வழங்குவதைத் தனியார்மயமாக்கல் செய்தபின்பு, விவசாயிகளுக்கு முறையாக உரம் கிடைக்காமல் போனது,” என்றார் அவர்.
அரிசி மற்றும் நெல் உற்பத்தியைப் பாதுகாக்க இருந்த எல்.பி.என் , 1996-ஆம் ஆண்டு முதல் பெர்னாஸ்-ஆக மாற்றப்பட்டது.
“ரிஸ்டாவின் ரப்பர் மறுநடவு திட்டம்கூட, தற்போது குத்தகை அடிப்படையில் நடக்கிறது, அதில் சில பிரச்சனைகளும் உருவாகியுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள்
வெளிநாட்டு தொழிலாளர்களால் மோசமடைந்து வரும், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் அவர் பேசினார்.
“பலர் வாரம் ஒரு நாள் மட்டுமே வேலை செய்கிறார்கள். மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கும் போது, மக்கள் நகர்ந்து செல்ல விரும்புகின்றனர் இதனால், நில விகிதம் அதிகரிக்கிறது. இருப்பினும், அரசாங்கம் வணிக சார்புடையது, தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளூர்வாசிகளை விட, வெளிநாட்டு தொழிலாளர்களையே அதிகம் விரும்புகின்றனர்.
“குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் கிடைக்கும்போது, அவர்கள் எதற்காக குறைந்தபட்ச சம்பளம் கொடுத்து, உள்நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்? தற்போது நாட்டில், முறையான ஆவணங்கள் கொண்ட 2 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களும், 3 மில்லியன் பேர் முறையான ஆவணங்கள் இல்லாமலும் வேலை செய்து வருகின்றனர்,” என்றார் டாக்டர் ஜெயக்குமார்.
நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அம்னோ மேல்தட்டுத் தலைவர்களை அவர் குற்றம் சாட்டினார்.
“யார் அவர்களைக் கொண்டு வந்தது? இதன்வழி, அம்னோ உயரடுக்குத் தலைவர்கள் டன் கணக்கானப் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், ஆனால் ஏழை மலாய்க்காரர்களுக்கும், பி40 வர்க்கத்தினருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. உள்ளூர்வாசிகள் குறைவான ஊதியத்திற்காக வெளிநாட்டவர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது,” என்று அந்த பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் குறிப்பிட்டார்.
தனியார்மய கொள்கையை நாட்டில் அமல்படுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவையும் அவர் குற்றம் சாட்டினார்.
“அந்தக் கொள்கை நன்றாகத்தான் தொடங்கியது, ஆனால், மகாதீர் இன்னும் அதிகமான தொழில் முனைவர்கள் உருவாக வேண்டும் என்பதற்காக, விவசாயத்துறைக்கான உதவியையும் தனியார்மயமாக்கினார்,” என்று அவர் முன்னாள் பிரதமரின் தனியார்மயமாக்கல் கொள்கையைக் குறிப்பிட்டு பேசினார்.
மேலே கூறப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க, பி.எஸ்.எம். கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள், அடிமட்டத்தில் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
“கிராமத் தலைவர்களுக்கான உள்ளூர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், இதனால் மக்களிடையே சமநிலையை உருவாக்க முடியும். தற்போதைய கிராமத் தலைவர்கள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அம்னோ கிளைகள்தான் இந்த சிக்கல்களுக்கானக் காரணங்களில் ஒரு பகுதி ஆகும்,” என்றும் அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு
இதற்கிடையில், உணவு பாதுகாப்பு பிரச்சினை குறித்து, ‘ப்ளைண்ட் ஸ்பாட்’ –ஐச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அஸ்லான் அவாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தற்போதைய, தன்னிறைவு நிலை 70% ஆகும், ஏனெனில் அரிசி வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படலாம் என்று அமைச்சு கூறுகிறது, ஆனால் அது பொருளாதார நெருக்கடி நேரத்தில் சாத்தியம் அல்ல.
“சராசரியாக ஹெக்டருக்கு மாதம் RM500-ல் இருந்து RM 700 வரை சம்பாதிக்கும் நெல் விவசாயிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். RM1,200 முதல் RM1,400 வரை இருந்தால்கூட, உணவு தேவையை உறுதிப்படுத்த முடியாது.”
இதற்கிடையில், மற்றொரு பேச்சாளரான ‘சயா அனக் பாங்சா மலேசியா’ வின் ஏ.ஜெயனாத், பக்காத்தான் ஹராப்பான் இந்த விஷயத்தில் பி.எஸ்.எம்.-உடன் ஒத்துழைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானின், 2018 வரவு செலவுத் திட்டம், விவசாயத்திற்காக மூன்று பக்கங்களைக் கொண்டிருந்தது, குறிப்பாக, ஃபெல்டா –வுக்காக என அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக மேலும் ஆய்ந்தறிய, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, பி.எஸ்.எம். செயல்படும் என்றும் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறுனார்.
“அவர்கள் இந்த அறிக்கையை, அவர்களின் பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்தலாம், எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நாங்கள் இதற்கு பதிப்புரிமை ஏதும் வைத்திருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.
இந்த அறிக்கையை விவசாயிகளிடம் கொண்டுசென்று, அவர்களின் கருத்தையும் பி.எஸ்.எம். கேட்டறியும் என்றும் அவர் தெரிவித்தார்.