நீதிமன்ற உத்தரவு: குவான் எங், இராமசாமி ஆகியோருக்கு ஹிண்ட்ராப் முன்னாள் ஆலோசகர் இழப்பீடு கொடுக்க வேண்டும்

 

ஹிண்ட்ராப் முன்னாள் தேசிய ஆலோசகர் என். கணேசன் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் துணை முதலைச்சர் II பி. இராமசாமி ஆகிய இருவருக்கும் தலா ரிம50,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு டிசம்பர் 4, 2013 இல், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய என். கணேசன், இந்த இருவரும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு தனிப்பட்ட அரசுசாரா அமைப்பின் கலந்துரையாடலைக் கலைப்பதற்கு குண்டர்களை அனுப்பியதாகக் கூறியது சம்பந்தப்பட்டதாகும்..

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி லிம் சோங் போங் வாதிகள் இருவருக்கும் மொத்த செலவுத் தொகையாக ரிம25,000 கொடுக்கும்படியும் உத்தரவிட்டார்.

‘குவான் எங் மற்றும் இராமசாமி ஆகிய இருவரும் உயர்மட்ட அரசு அதிகாரிகள். அவர்களுக்கு எதிராக அவதூறுகளையும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் கூறியவர்களுக்கு எதிராக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

“குவான் எங்கும் இராமசாமியும் அந்தக் கலந்துரையாடலைக் கலைப்பதற்கு குண்டர்களை அனுப்பினர் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை அளிக்க பிரதிவாதி தவறி விட்டார்”, என்று நீதிபதி கூறினார்.

குவான் எங்கும் இராமசாமியும் நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மற்றும் அதன் முன்னாள் செய்தியாளர் பிரதீப் நம்பியார் ஆகியோருக்கு எதிராக இவ்விவகாரம் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் 6 இல், முன்னதாக உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு எதிராக குவான் எங்கும் இராமசாமியும் தொடுத்திருந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து அளித்திருந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.

என்எஸ்டி வாதிகள் இருவருக்கும் தலா ரிம200,000 இழப்பீடும் செலவுத் தொகையாக ரிம50,000மும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.