இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள்

நவம்பர் 29, 2017 – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள், உடல் நலக்குறைவால் இன்று நீண்ட தூரம் நடக்க முடியாமல் போனது என்று, நாம் தொடர்பு கொண்டபோது தியாகு வருத்தம் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணிவரை, யொங் பேங் வட்டார மக்களுடன் கலந்துரையாடியதை நம்மோடு அவர் பகிர்ந்துகொண்டார்.

நேற்றிரவு, யொங் பேங் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் செயலாளர் விமலநாதனின் முயற்சியில் ஏற்பாடாகி இருந்த ஒரு நிகழ்ச்சியில், வட்டார மக்கள் மத்தியில் தான் இருமொழி திட்டம் பற்றி பேசியதாக அவர் தெரிவித்தார்.

மண்டபத்தில் நுழைந்தபோது, அனைவரும் எழுந்துநின்று ‘தமிழர்களின் வேள்வி, தாய்மொழிக் கல்வி’ என்று கோசமிட்டு, தங்களை ஆர்வத்துடன் வரவேற்றதாக தியாகு கூறினார்.

“வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்கள், ஆனால் அவர்களில் யாருக்கும் இந்த இருமொழி திட்டம் (டி.எல்.பி.) பற்றி தெரியவில்லை. ‘இருமொழி திட்டம்’ என்ற பெயர்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. ஆக, முறையான விளக்கத்தை மக்களிடம் சொல்லாமலேயே, இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது,” என்று தியாகு கூறினார்.

“சம்பந்தப்பட்ட பள்ளிகள், பெற்றோர்களை மட்டும் அழைத்து, டி.எல்.பி. பற்றி பேசி, அவர்களை அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோருகின்றனர். சம்மதிக்காதப் பெற்றோர்களை, தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றி கொண்டுசெல்ல வற்புறுத்துகின்றனர்,” என்று தியாகு தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டுவருவது பற்றி பேசியபோது, “தமிழ்ப்பள்ளி நீண்ட தூரத்தில் அமைந்திருப்பதால், அதிகமானோர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப சிரமப்படுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

“தமிழ்ப்பள்ளிக்குச் செல்ல பிள்ளைகள் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் தயாராக வேண்டும். பள்ளி பேருந்து சுமார் 2 மணி நேரம் சுற்றியடித்து, 7.30 மணிக்கு பள்ளி கொண்டுபோய் சேர்க்கும். வீடு திரும்பும்போதும் அப்படிதான், அதனால் பிள்ளைகள் சோர்வடைந்து விடுகின்றனர் என்று பெற்றோர் வருத்தப்படுகின்றனர்,” என்றார் தியாகு.

அதுமட்டுமின்றி, பள்ளிப் பேருந்து கட்டணமும், தற்போதைய செலவினங்களுக்கு கட்டுப்படியாகவில்லை, அதனால் அருகில் இருக்கும் தேசியப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதாக பெற்றோர்கள் வருத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“ஆக, இப்பிரச்சனையைத் தீர்க்க அரசாங்கம் நகர திட்டமிடலின் போது, தேசியப் பள்ளிகளுக்கு இடம் ஒதுக்குவதுபோல், தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிலங்கள் ஒதுக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்காத தோட்டப் புறங்களில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகர்புறங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்,” என்று தியாகு கூறினார்.

உடல் நலக்குறைவால் இன்று ஓய்வெடுத்து, நாளை அதிகாலை மீண்டும் தங்கள் பயணம் தொடரும் என்று கூறி நம்மிடமிருந்து தியாகு விடைபெற்றார்.

நாளை இரவு ச்’சா ஆ பட்டணத்தில் அவர்கள் தங்கி, ஓய்வெடுப்பார்கள் எனத் தெரிகிறது. சுற்றுவட்டார தமிழ் உணர்வாளர்கள் அவர்களைச் சென்று காணலாம்.

மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.

அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள்,  012 4341474 –  தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்  என்ற எண்களில் அழைக்கலாம்.

-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்