குவோக் குறை சொல்வதை நிறுத்தி விட்டு சொத்தைப் பகிர்ந்துக் கொள்வதைத் தொடங்க வேண்டும், பங் மொக்தார்

 

உழைப்பால் உயர்ந்த “சீனி மன்னன்” ரோபர்ட் குவோக் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வழி மலேசியத் தலைவர்கள் பற்றி “நியாயமற்ற” கருத்துகளைத் தெரிவிப்பதை நிறுத்தி விட்டு அவரது தொழிலை இந்நாட்டில் விரிவாக்கம் செய்வதன் வழி அவர் “சொத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்”, என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின் கூறுகிறார்.

“நான் ரோபர்ட் குவோக்கை ஒரு வெற்றி பெற்ற தலைவராகப் பார்க்கிறேன். அவர் தனது தொழிலை இங்கு தொடங்கினார். ஆனால் கவலையளிப்பது என்னவென்றால் அவர் தனது தொழிலை வெளிநாட்டிற்கு கொண்டு போய் விட்டார்.

“அவர் மலேசியாவில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். அது இங்குள்ள பல்லின மக்களுக்கு சந்தர்ப்பங்களை அளிப்பதோடு அவர்கள் சொத்தை அவருடன் பங்கிட்டுக்கொள்ள முடியும்”, என்று பங் மொக்தார் மலேசியாகினியிடம் கூறினார்.

மலேசியாவிற்கு திரும்பி வந்து இந்நாட்டின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டிய கடப்பாடு அவருக்கு உண்டு என்றார் பங்.

“அவர் சீனி மன்னன், சீனிக்கான ஏகபோக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர். அவர் தொழிலை முதலில் எங்கு தொடங்கினாரோ அந்த இடத்திற்கு அவர் திரும்பி வர வேண்டும்.

“நான் அவரை நாட்டுப்பற்று அற்றவர் என்று குற்றம் சாட்டவில்லை, அவர் கொஞ்சம் வழி தவறி விட்டார், அங்கிருக்கும் சந்தர்ப்பங்களைப் பிடிக்கும் முயற்சியில்”, என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பங் மொக்தார் மேலும் கூறினார்.