மகாதிர், அன்வார்மீது விசாரணைக்கு ஆர்சிஐ பரிந்துரை

  பேங்க்    நெகராவின்   அன்னிய   செலாவணி    இழப்புகளை   ஆராய  அமைக்கப்பட்ட    அரச    விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ) ,  முன்னாள்    பிரதமர்   டாக்டர்    மகாதிர்   முகம்மட்டும்   அப்போதைய   துணைப்   பிரதமர்    அன்வார்    இப்ராகிமும்   உண்மை   நிலவரத்தை    அமைச்சரவைக்குத்    தெரியாமல்     மறைத்தார்களா   என்பதைக்   கண்டறிய   ஒரு   விசாரணை   நடத்தப்பட    வேண்டும்    எனப்    பரிந்துரைத்துள்ளது.

இன்று   பிற்பகல்    வெளியிடப்பட்ட     ஆணையத்தின்    அறிக்கை,  அவ்விருவரும்  நோர்   முகம்மட்   யாக்கூப்புக்கு   உடந்தையாக    இருந்து  அமைச்சரவைக்குத்   தெரியாமல்   சில   உண்மைகளை   மறைத்து    விட்டார்கள்   என்றும்   அது       சட்டப்படி   குற்றமாகும்   எனவும்   குறிப்பிட்டது.

அன்றைய  நிலையில்   நோர்   முகம்மட்   பேங்க்   நெகாராவில்    அன்னிய   செலவாணி  நிர்வகிப்பு    உள்பட  பல   பொறுப்புகளை   வகித்தார்.

நோர்   முகம்மட்டை   நம்பிக்கை   மோசடிக்   குற்றத்துக்காகவும்(சிபிடி),  1958 ஆம் ஆண்டு   மத்திய   வங்கி   ஆணைகளை   மீறியதற்காகவும்    விசாரிக்க   வேண்டும்   எனவும்   ஆர்சிஐ   பரிந்துரைத்தது.

அதேவேளை   நோர்   முகம்மட்    சிபிடி  குற்றம்    இழைக்க  முன்னாள்   நிதி   அமைச்சர்   டயிம்   ஜைனுடின்    உடந்தையாக    இருந்தார்   என்றும்   ஆர்சி   குற்றஞ்சாட்டியது.      டயிம்  1991வரை   நிதி   அமைச்சராக   இருந்தார். பின்னர்   அவரின்  இடத்தில்   அன்வார்   அமர்த்தப்பட்டார்.

அமைச்சரவைக்   கூட்டங்களின்    குறிப்புகளில்   பேங்க்   நெகாராவுக்கு    ஏற்பட்ட   உண்மையான    இழப்புகள்   குறித்தோ    பேங்க்   நெகாரா    ஆண்டறைக்கையில்    அதை  மூடிமறைக்க    மேற்கொள்ளப்பட்ட    நடவடிக்கைகள்    குறித்தோ    அன்வார்     எடுத்துரைத்ததாக   எந்த   இடத்திலும்   பதிவு   செய்யப்படவில்லை.

“1994, ஏப்ரல்   6இல்  பிரதமர்(மகாதிர்)   தலைமையில்    நடைபெற்ற    அமைச்சரவைக்   கூட்டத்தில்   அன்னிய      செலாவணி   இழப்பு  ரிம5.7 பில்லியன்   என்று      அறிவிக்கப்பட்டுள்ளது”,  என   ஆர்சிஐ   அறிக்கை   கூறியது.

ஆனால்,  மகாதிருக்கு    அளிக்கப்பட்ட   விளக்கமளிப்பில்   1992-இலிருந்து  1993வரை     அன்னிய   செலாவணி   வணிகத்தில்    ஏற்பட்ட    மொத்த    இழப்பு   ரிம30   பில்லியன்   இருக்கலாம்    என   அன்வாரும்     கருவூலத்தின்   முன்னாள்   தலைமைச்    செயலாளர்   கிளிப்பர்ட்   பிரான்சிஸ்   ஹெர்பர்டும்   தெரிவித்துள்ளனர்.

இந்த  விளக்கமளிப்பு    “1993  பிற்பகுதியில்”  நடந்துள்ளது.

அன்வாரும்   ஹெர்பர்டும்   ஒரே  மாதிரியாக    அவர்களின்   சாட்சியத்தில்   ரிம30 பில்லியன்   இழப்பு   ஏற்பட்டதாகக்  கூறியதைப்    பார்க்கையில்   மகாதிர்   இழப்பு   குறித்து   தமக்குத்    தெரியாது    என்று    கூறுவது   “சந்தேகத்தை”   எழுப்புகிறது.

மகாதிர்   சாட்சியமளிக்கையில்  இழப்பு   ரிம30  பில்லியன்   என்று   குறிப்பிடப்பட்டதாக    நினைவில்லை   என்றார்.

“சுமார்   ரிம5 பில்லியன்  இழப்பு    என்று    சொல்லப்பட்டதுதான்    நினைவில்   உள்ளது”,   என  முன்னாள்   பிரதமர்   தம்   சாட்சியத்தில்    குறிப்பிட்டதாக   அறிக்கை  கூறியது.

பேங்க்   நெகாரா   1992க்கும்   1994-க்குமிடையில்    அன்னிய   செலாவணி    வணிகத்தில்  ரிம31.5 பில்லியனை   இழந்ததாக   ஆர்சிஐ   அதன்  விசாரணைகளின்வழி      நிறுவியுள்ளது.

பேங்க்   நெகாரா   இழப்புகளை   மூடிமறைத்ததற்காக    பேங்க்    நெகாரா,   நிதி   அமைச்சு,  தலைமைக்  கணக்காய்வாளர்துறை    ஆகியவற்றின்   அதிகாரிகள்மீதும்  பேங்க்   நெகாரா   இயக்குனர்  வாரியத்தின்மீதும்   விசாரணை   நடத்த    வேண்டும்    என  அந்த    ஆணையம்   பரிந்துரைத்தது.