ரோபர்ட் குவோக்கின் கனவைத் தடம்புரளச் செய்தவர்கள் அம்னோ தலைவர்கள் என்கிறார் ஸைட் இப்ராகிம்

 

கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கின் கனவு நிறைவேறுவதற்கு தடங்களாக இருந்தவர்கள் அம்னோ தலைவர்கள் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.

ஒரு வெற்றிபெற்ற மற்றும் ஒன்றுபட்ட தாய்நாடு குவோக்கின் கனவாக இருந்தது. அக்கனவை பல மலேசியர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது டிஎபி உறுப்பினருமான ஸைட் நினைவுகூர்ந்தார்.

குவோக் மற்றும் பல மலேசியர்களின் அக்கனவு நிறைவேறாமல் போனதற்கு அரசியல் எதார்த்தம் காரணமல்ல என்று கூறிய ஸைட், அதற்குப் பொறுப்பானவர்கள் அம்னோவிலிருந்த சுயநல, நடுத்தரமான மற்றும் பலவீனமான தலைவர்கள் என்றாரவர்.

ஜோகூரில் பிறந்த பெரும் தொழிலதிபர் குவோக்கின் புதுமைக் கருத்துகள் அமலாக்கப்படுவது கடினமாக இருந்ததற்கு காரணம் மலேசியாவின் அரசியல் எதார்த்தம் என்று சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நாஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்திருந்த கருதுக்கு எதிர்விலையாற்றிய ஸைட் இவ்வாறு கூறினார்.

ஒரு நாள் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்றாரவர்..

மலேசியா தவறான பாதையில் செல்கிறது என்று குவோக் கூறிக்கொண்ட கருத்து “நியாயமான கருத்து” என்று நஸ்ரி வர்ணித்தார்.

“Robert Kuok: A Memoir”என்ற அவரது சுயசரிதையில் தாம் பிரதமர் ஹுசேன் ஓனை சந்தித்து இன அடிப்படையிலான அமைவுமுறையை நம்பிக்கொண்டிருப்பதற்கு மாறாக சிறந்த அறிவாளிகளை அரசாங்கத்திற்குள் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டதாக குவோக் கூறுகிறார்.

அதற்குப் பதில் அளித்த ஹுசேன், “இல்லை, ரோபர்ட். அதை என்னால் செய்ய முடியாது. இப்போது மலாய்க்கார்கள் ஒருவிதமான மனப் போக்கில் இருக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்”, என்று குவோக் எழுதியுள்ளார்.

1969 ஆம் ஆண்டில் இனக் கலவரம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சந்திப்பு நடபெற்றது.

ஹுசேன் தாம் கூறியதைப் புரிந்து கொண்டதாக கூறும் குவோக், ஆனால் காலம் கடந்து விட்டது என்கிறார்.

“தொடக்கம் முதல் முடிவு வரையில் ஓர் இரயில் வண்டி தவறான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் காட்சியை நான் கண்டிருக்கிறேன்.. ஹுசேனின் நிருவாகத்தின் போது, அவர் அந்த அலையைத் தடுப்பதில் ஓரளவுக்குத்தான் வெற்றி பெற்றார்.

“நாட்டின் இரயில் வண்டி தவறான தண்டவாளப்பாதையில் விடப்பட்டிருக்கிறது. அந்த இரயில் வண்டியை நிறுத்தி சரியான பாதையில் விடுவதற்கான வலிமை ஹுசேனிடம் இல்லை”, என்று அந்த 94 வயதான தொழிலதிபர் மேலும் கூறுகிறார்.