நவம்பர் 30, 2017 – நடைப்பயணத்தின் ஆறாம் நாள், அதிகாலை 3.30 மணியளவில் பயணம் தொடங்கியது. இன்று தியாகுவுடன் தோழர் அஞ்சாதமிழன் இணைந்துகொண்டார்.
நேற்று, உடல்நலக் குறைவால் கடக்கமுடியாத தூரத்தை இன்று கடந்தாக வேண்டும் என்ற வேட்கையோடு, இன்னும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லாபிஸ் பட்டணத்தை நோக்கி அவர்கள் நடக்கத்தொடங்கினர்.
லாபிஸ் பட்டணத்தை அடைய இன்னும் 5 அல்லது 6 கிலோமீட்டர் எஞ்சி இருந்தவேளை, தோழர் அஞ்சாதமிழன் காலில் வலி ஏற்பட்டு, பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று என்று தியாகு சொன்னார்.
“அங்கேயே, ஒரு பேருந்து தரிப்பிடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தப்பின், எங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்,” என்று அஞ்சாதமிழன் தெரிவித்தார்.
அவர்களின் இலக்கை அடைய இன்னும் ஓரிரு கிலோமிட்டர் இருக்கும்
தருவாயில், வழியில் லாபிஸ் தமிழ்ப்பள்ளியைக் கண்டதாக அவர்கள் கூறினார்கள். பள்ளித் தலைமையாசிரியரைச் சந்திக்கும் எண்ணத்தில் பள்ளியினுள் சென்றுள்ளனர்.
“ஆனால், பள்ளியில் தலைமையாசிரியர் இல்லை, புறப்பாட நடவடிக்கை பொறுப்பாசிரியர் திரு குகன் இருந்தார். எங்களை அன்புடன் வரவேற்று, எங்கள் நடைப்பயணத்தின் நோக்கத்தைக் கேட்டறிந்தார். எங்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவித்தார்,” என்று தியாகு நம்மிடம் தெரிவித்தார்.
“பள்ளியின் துப்புரவு பணியாளர்கள் சிலரிடம் பேசும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. அவர்களிடமும் நமது நடைப்பயணம் பற்றி பேசினோம். அவர்களும் எங்களுக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்,” என்றார் தியாகு.
அவர்களின் சந்திப்பிற்குப் பின், மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து, அன்றைய இலக்கை அடைந்துள்ளனர். லாபிஸ் சீனப்பள்ளியின் எதிர்புறத்தில் இருந்த திடலில் தங்களின் கூடாரத்தை அமைத்து, ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மாலை மணி 4 அளவில், கனத்த மழையின் காரணமாக, அவர்களின் கூடாரத்திற்குள் நீர் புக ஆரம்பித்துள்ளது. எனவே, கூடாரத்தைக் கழற்றி மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளனர்.
“மீண்டும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து, ஒரு கடைத் தெருவை அடைந்தோம். ஜாலான் மாஜூ ஜெயா 1 – இன்றிரவு எங்களின் நித்திரை இங்கேதான்,” என்று கூறினார் தியாகு.
வரும்வழியில் இவர்களை நிறுத்தி காரணம் கேட்ட, லாபிஸ்-ஐ சேர்ந்த
திரு சேகரன், அவர்தம் பள்ளி நண்பர்களோடு இன்றிரவு இவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தியாகு தெரிவித்தார்.
நாளை சிகாமாட் பட்டணத்தை அடைய, அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர். சுற்றுவட்டாரத் தமிழ் உணர்வாளர்கள், நாளை இரவு அவர்களை அங்குச் சென்று காணலாம்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
என் ஆதரவு எப்போதும்–தொடரட்டும் உங்களின் தமிழ் பணி.