நாடாளுமன்றம் நாளை கூட கலைக்கப்படலாம், நஜிப்பின் குறும்புப் பேச்சு

14-வது பொதுத் தேர்தல் எப்போது என்று பலர் காத்துக்கிடக்க, நாளைகூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று பிரதமர் நஜிப் ரசாக் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இன்று நெகிரி செம்பிலானில், முதல் ‘நகர உருமாற்று மையம்’-ஐ (யுதிசி) திறந்துவைத்தபோது, மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர் இவ்வாறு கூறினார்

“அம்பாங்கானில் இந்த யுதிசி திறக்கப்பட்டதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள் என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.

“அதனால்தான் இன்றைய கொண்டாட்டம் நம்பமுடியாததாக இருக்கிறது. நாளைக்கே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என நான் நினைக்கிறேன்,” என நஜிப் தெரிவித்தார்.

2018, ஜூலை 26-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த 60 நாள்களில் 14-வது பொதுத் தேர்தல் நடத்தியாக வேண்டும்.

சமீபத்தில், துணைப் பிரதமர் ஷைட் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி சீனப் புத்தாண்டுக்குப் பிறகு,  14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, முந்தையக் கட்டிடத்தை மேம்படுத்தி, அம்பாங்கான் யுதிசி-ஐ உருவமைக்க RM34.29 மில்லியன் செலவானது என்று நஜிப் தெரிவித்தார்.

“நாங்கள் பணத்தை விரயம் செய்வதில்லை. ஒருவேளை, ஒரு புதிய கட்டிடத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால், RM150 மில்லியன் செலவாகி இருக்கும்” என்று நஜிப் கூறினார்.

இந்த அம்பாங்கான் யுதிசி வடிவமைப்பு பணிகளை முடிக்க 12 வாரங்கள் மட்டுமே தேவைபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அந்த இருபதாவது ‘நகர உருமாற்று மையம்’, ஜாலான் சிரம்பான் – கோலா பிலா சாலையில் அமைந்துள்ளது. அனுதினமும் காலை 8.30 மணி முதல் இரவு 10 வரை அது பொது மக்களுக்காக செயல்படும்.