சுரேஸ் : அட்னானைச் சந்திக்கும் வரை, மந்திரி பெசார் அலுவலகத்தை விட்டு நகரமாட்டோம்!

எதிர்வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று, தங்கள் நில உரிமை பிரச்சினைக்காக பஹாங் மந்திரி பெசார் அட்னான் யாக்கோப்பைச் சந்திக்கவிருக்கும் குடியிருப்பாளர்களைக் கைது செய்யக்கூடாது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) புக்கிட் அமானைக் கேட்டுக் கொண்டது.

இதற்கு முன், மந்திரி பெசார் அலுவலகத்திற்கு முன்னால், அட்னானுடனான ஒரு சந்திப்புக்காக காத்திருந்தபோது, 31 பேர் கைது செய்யப்பட்டனர். 2012-ல் நடந்த அந்தச் சம்பவத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த கோரிக்கையை முன்வைப்பதாக பி.எஸ்.எம். கேமரன் மலை கிளையின் செயலாளர் சுரேஸ் குமார் கூறினார்.

“இன்று நாங்கள் காவல்துறை தலைவரிடம் ஒரு மனுவைக் கொடுத்துள்ளோம். எதிர்வரும் டிசம்பர் 12-ம் தேதி, கேமரன் மலை குடியிருப்பாளர்களின் நில உரிமை பிரச்சனைக்காக மந்திரி பெசாரைச் சந்திக்க உள்ளோம். அச்சந்திப்பின்போது, குடியிருப்பாளர்களில் யாரையும் கைது செய்யக்கூடாது, போலிசார் நிபுணத்துவத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளோம்,” என்று, புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தின் வெளியே, சுரேஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 2012-ல், குவாந்தானில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் இருந்து கலைந்து செல்ல மறுத்ததால், கேமரன் மலையைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் சில சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டனர்.

சுரேஸ்குமார் தலைமையிலான அக்குழுவினர், மறுநாளே எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 3-ம் தேதிக்குப் பின்னர், இவ்வாண்டில் திட்டமிடப்பட்ட இரண்டாவது சந்திப்பு இதுவென்று சுரேஸ் தெரிவித்தார்.

அக்டோபர் 3-ம் தேதியிலான அச்சந்திப்பை, ஒருநாளுக்கு முன்னதாக அட்னான் இரத்து செய்ததாகவும் சுரேஸ் தெரிவித்தார்.

“இம்முறையும் எங்கள் சந்திப்பை அவர் இரத்து செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் டிசம்பர் 12-ல், அவர் (அட்னான்) (கூட்டம்) இரத்து செய்தாலும்,  அவரைச் சந்திக்கும் வரை,  மந்திரி பெசார் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

“எனவே, போலீசார் 2012-ல் செய்ததைப்போல் செயல்பட வேண்டாம், இந்த பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசு (மாநில) மக்களிடம் பேச, ஒத்துழைக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.

மந்திரி பெசார் அலுவலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் கூடவுள்ளதாகவும் அவர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர்.

புக்கிட் அமானின் நிறுவனத் தகவல்தொடர்பு அதிகாரி நோர்ஹஃபிஷா முகமட் யூசா இன்று அவர்களது மனுவைப் பெற்றுகொண்டார். இது தொடர்பாக, காவல்துறை தலைவர், மொஹமட் ஃபூஸி ஹருனிடன் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.