ஏன் ஜோகூர் மந்திரி பெசார் விசாரிக்கப்படவில்லை, எம்எசிசியைச் சாடினார் புவா

 

ஜோகூர் மாநிலத்தின் நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அம்மாநில மந்திரி பெசார் சம்பத்தப்பட்டிருப்பது பற்றி ஏன் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்கவில்லை என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வினவினார்.

ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் இந்த நில விவகாரத்தில் சபந்தப்பட்டுள்ள தகவல் இந்த வாரம் எம்எசிசியிடம் அளிக்கப்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கை கசிந்ததிலிருந்து தெரிய வந்துள்ளது என்றார் புவா.

இந்த விசாரணையின் தொடக்கச் செய்திகள் அதிர்ச்சி அளித்தன. அவற்றைவிடப் பெரிய அதிர்ச்சி சாட்சியின் அறிக்கையில் காணப்படுகிறது என்று புவா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இந்த ஆவணங்களின் நம்பத்தக்க நிலையை எம்எசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்போது எம்எசிசி அந்த ஆவணங்களை அங்கீகரித்துள்ள வேளையில், அவர்கள் ஏன் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த சாட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ள மந்திரி பெசாரை விசாரிக்கத் தவறி விட்டனர் என்பதற்கு எம்எசிசி விளக்கம் அளிக்க வேண்டும் என்று புவா அவரது அறிக்கையில் கோரியுள்ளார்.

இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட விசாரணை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியதிலிருந்து ஏன் மந்திரி பெசார் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று எதிரணித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை, ஜொகூர் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தில் மந்திரி பெசார் காலிட் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.