பேராக்கில் ஐந்தாண்டுகளில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

அண்மை  வரலாற்றில்   இப்படி   ஒரு   வெள்ளத்தைப்    பார்த்ததில்லை     என்கிறார்கள்   பேராக்   மாநில   மக்கள்.

செகாரி,  கம்போங்   செமாங்காட்டைச்   சேர்ந்த    பைசல்   முகம்மட்   ரட்ஸி, 32,  அக்கிராமத்துக்கு   வந்த   ஐந்தாண்டுகளில்   இவ்வளவு   மோசமான   வெள்ளப்பெருக்கைக்   கண்டதில்லை     என்றார்.

“எங்கள்     வீட்டுக்கு   வெளியில்   வெள்ளநீர்    நெஞ்சுவரை    உயர்ந்திருந்தது   கண்டு  அதிர்ச்சி     அடைந்தேன். என்  எட்டு   வயது   மருமகனைக்  கையில்   தூக்கிக்கொண்டுதான்   துயர்த்துடைப்பு   மையத்துக்குச்    சென்றேன்.

“வெள்ளம்   இவ்வளவு    மோசமாக    இருக்கும்    என்று     எதிர்பார்க்கவில்லை. பள்ளி  விடுமுறையைக்   கழிக்க    வந்த   மருமகன்    வெள்ளத்தில்   சிக்கிக்க்கொண்டதை   நினைத்தால்தான்    வேதனையாக    உள்ளது”,  என்றார்.

மாஞ்சோங்கில்    வெள்ளத்தில்    சிக்கிக்கொண்ட    158   குடும்பங்களைச்    சேர்ந்த   709  பேரில்   பைசலும்   ஒருவர்.  அவரும்    மற்றவர்களும்   லூமூட்டிலும்   பந்தாய்    ரெமிசிலும்   உள்ள     ஆறு    துயர்த்துடைப்பு    மையங்களுக்கு   அப்புறப்படுத்தப்பட்டனர்.

கிளந்தானில்   14ஆயிரம்   பேர்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டனர்

இதனிடையே,  கிளந்தானில்    மேலும்   பலர்    அவர்களின்  வீடுகளிலிருந்து    வெளியேறித்    துயர்த்துடைப்பு   மையங்களில்     தஞ்சம்   புகுந்துள்ளனர். நேற்று     13,873    ஆக     இருந்த   துயர்த்துடைப்பு   மையங்களில்    தஞ்சமடைந்தாவர்   எண்ணிக்கை   இன்று   காலை    8 மணிக்கு   14,237 ஆக    உயர்ந்தது.

அவர்கள்  கோத்தா     பாரு,   பாசிர்   மாஸ்,   தும்பாட்,  தானா   மேரா,    பாசிர்    பூத்தே,  குவா   மூசாங்    ஆகிய    ஆறு   மாவட்டங்களில்    உள்ள    63   துயர்த்துடைப்பு    மையங்களில்     தங்கியுள்ளனர்.

 

திரெங்கானுவில்   வெள்ள   நிலைமை    வெகுவாக   மேம்பட்டுள்ளது.      அங்கு   இன்று   காலை    சித்தியு,  பெசுட்   மாவட்டங்களில்   இரண்டு   மையங்களில்   12   குடும்பங்களைச்   சேர்ந்த   49   பேர்   மட்டுமே   தங்கியிருந்தனர்.

ஆனாலும்,  நேற்றிரவு    பெய்த   கடும்  மழையில்   சில    ஆறுகளில்   நீர்   மட்டம்   உயர்ந்துள்ளது.

-பெர்னாமா