அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் சமய அதிகாரிகள், பேராக் சுல்தான் கவலை தெரிவித்தார்

 

சமய அதிகாரிகளும் சமய அமைப்புகளும் அவற்றின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இன்று கவலை தெரிவித்தார்.

இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக விதிகளை அமல்படுத்தும் நோக்கத்தோடு கேள்வி கேட்டல் போன்ற நடவடிக்களை மேற்கொள்ளும் சில சமய அதிகாரிகளும் சமய அமைப்புகளும் இறுமாப்புடனும் அடக்குமுறையுடனும் நடந்துகொள்வது இஸ்லாத்தின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

சமய மிதவாதம் பின்பற்றப்படுவதால் மலேசியாவுக்கு நற்பெயர் இருப்பதோடு அது இஸ்லாமிய மற்றும் இஸ்லாமற்ற நாடுகளில் மதிக்கப்படுகிறது என்று கூறிய சுல்தான், கேவலப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது, வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கைகளை எடுப்பது, மிரட்டுவது மற்றும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் போது சித்ரவதை செய்வது மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை இந்நாட்டில் பின்பற்றப்படும் இஸ்லாத்திற்கு எதிர்மறையான தோற்றத்தை அளிக்கிறது என்றார்.

ஈப்போவில் பேராக் மாநில அளவிலான இறைத் தூதர் முகமட்டின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் பேசினார். அவருடன் பேராக் ராஜா பரமைசுரி, துவாங்கு ஸாரா சலிமும், இருந்தார்.

இஸ்லாத்தின் புனிதத்தன்மை உண்மையை அடிப்படையாகக் கொண்ட விவாதம் மற்றும் வாக்குவாதம் மற்றும் வேறுபாடுகள், வேறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் குணநலன் ஆகியவற்றின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேராக் சுல்தான் மேலும் கூறினார்.