கருத்து வேறுபாடுகளைக் கலைந்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கத் தயார் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார், “ஆனால், பி.எஸ்.எம்.-ஐ எதிர்க்கட்சி கூட்டணியில் இணைக்கும் எண்ணம் ஹராப்பானுக்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்,” என்றும் கூறினார்.
“இதுவரை, அவர்கள் நம்மிடம் கூறியது என்னவென்றால், சுங்கை சிப்புட்டில் நான் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடலாம், ஆனால் பி.எஸ்.எம்.-ஐ சார்ந்தவர்கள் வேறு எங்கும் நிற்கக்கூடாது என்ற நிபந்தனையோடு,” என்றார் ஜெயக்குமார்.
“இந்த நிபந்தனையின் படி, கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், கேமரன் மலை கிளையின் செயலாளர் பி.சுரேஸ் குமார், கட்சியின் துணைத் தலைவர் எம்.சரஸ்வதி என யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது, இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என்று டாக்டர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
“பேச்சுவார்த்தை நடந்தால், சிலவற்றை விட்டுக்கொடுக்கலாம், ஆனால் நாற்காலியை விட்டுக்கொடுக்க முடியாது,” என்று நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்த போது அவர் கூறினார்.
பி.எஸ்.எம். எப்போதுமே, மக்களுக்கான கீழ்மட்ட வேலைகளில் சிறப்பாக செயல்படும் என ஜெயக்குமார் கூறினார்.
“நாங்கள் வித்தியாசமான ஒரு செய்தியை, பார்வையைக் கொண்டுவர எண்ணுகிறோம்.
“ஒருவேளை பிகேஆர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாலும், பி.எஸ்.எம்.-இன் கொள்கைகளையே நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் கொண்டுசெல்வோம்.
“பக்காத்தான் ஹராப்பானுக்கு நாங்கள் அடிமட்டத் தோற்றத்தைக் கொண்டு வருவோம்,” என்றார்.
பி.எஸ்.எம். கொண்டுவரும் சில கருத்துகள் ஹராப்பானுக்கு ஒத்துவராமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
“மக்களின் நலனை நாங்கள் எப்பொழுதும் கவனித்துக் கொள்வோம்,” என்றும் அவர் சொன்னார்.