டிசம்பர் 1, 2017 – நடைப்பயணத்தின் ஏழாம் நாள், இன்று அதிகாலை 3.30 மணியளவில் தியாகுவும் அஞ்சாதமிழனும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
நீண்டப் பயணத்திற்குப் பின்னர், காலை மணி சுமார் 11.30 அளவில் அவர்கள் சிகாமாட் பட்டணத்தை அடைந்துள்ளனர். அங்கு, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த்தீரன் பணிமனையில் இன்றிரவு தங்க ஏற்பாடாகி உள்ளது.
இன்று மதியம் 2 மணியளவில், மலேசிய நாம் தமிழர் இயக்கத் தோழர்கள், கலைமுகிலன் தலைமையில் அவர்களைச் சந்திக்க அங்கு வந்ததாகவும், அவர்களுடன் சில மணி நேரங்களைச் செலவிட்டதாகவும் தியாகு தெரிவித்தார்.
“நாம் தமிழர் இயக்கத்தினர், ‘மலேசியத் தமிழ்க்கல்வி மீட்சி மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி, பிரிக்பீல்ட்சில் நடக்கவிருக்கும் அந்த மாநாட்டின் நோக்கமும், நமது பெருநடையின் நோக்கமும் ஒன்றுதான், ‘டி.எல்.பி. தமிழ்ப்பள்ளிக்கு வேண்டாம்!’ ஆக, நாம் வெவ்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், டி.எல்.பி. திட்டத்தை எதிர்க்க ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று தியாகு தெரிவித்தார்.
அவர்களைத் தொடர்ந்து, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக பஞ்சு மற்றும் கொள்கைச் சுடர் ரெ.சு.முத்தையா இருவரும் வந்து, அவர்களைச் சிறப்பித்துள்ளனர்.
அச்சந்திப்பின் போது, “அன்று கோ.சாரங்கபாணி செய்த போராட்டத்தினால்தான், இன்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவு இருக்கிறது. இன்று இவர்கள் செய்யும் இந்தப் போராட்டம், நாட்டில் தமிழ்க்கல்வி நிலைத்து நிற்க காரணமாக அமையும்,” என்று ரெ.சு.முத்தையா கூறினார்.
“இது விளையாட்டான காரியம் அல்ல, நீண்ட நடைப்பயணம். உடல்நலக் குறைவோடு, சுமார் 150 கிலோ மீட்டரைக் கடந்துவிட்டனர். நாளை நாம் இல்லாமல் போகலாம், ஆனால் வரலாறு இவர்களைப் பற்றி பேசும். இந்த இளைஞர்களின் நடைப்பயணம் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தும், இவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, பல்கலைக்கழகத் தேர்வு காரணமாக தமிழ் இனியன் கோலாலம்பூர் செல்லவேண்டி உள்ளதால், இனி தாங்கள் மூவர் மட்டும்தான் பயணத்தைத் தொடரவுள்ளதாக தியாகு தெரிவித்தார்.
புத்ராஜெயாவுக்குச் செல்லும் பழையப் பாதையில் பயணிக்கவும் தங்கி ஓய்வெடுக்கவும் இடங்களைக் காட்ட, கோலாலம்பூரில் இருந்து வந்த டாக்சி ஓட்டுநர் பாலமுருகனுடன், தமிழ் இனியன் சென்றுள்ளார்.
“அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நாங்கள் மூன்று பேர்தான், சற்று சிரமமாக இருக்கும். ஆனால், இலக்கை அடைய தொடர்ந்து நடப்போம். நாளை கெமாஸ் பட்டணத்தை அடைய வேண்டும்,” என்றார் தியாகு.
“முகநூல் பக்கத்தில் எங்களின் வீடியோ பதிவேற்றங்களை 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்கள். ஆக, நமது நோக்கம் பலரைச் சென்றடைந்துள்ளது. பலர் எங்களைத் தொலைபேசியில் அழைத்து பேசினார்கள், சிலர் நேரில் வந்து சந்தித்து, உற்சாகம் அளித்தார்கள், மகிழ்ச்சி. தொடர்ந்து நாம் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார் தியாகு.
நாளை கெமாஸ் சுற்றுவட்டாரத் தமிழ் உணர்வாளர்கள், அவர்களை அங்குச் சென்று காணலாம்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
தொடரட்டும் உங்களின் முயற்சி. வாழ்த்துக்கள்.
தமிழ்ப் பள்ளி மாணவன் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் போது அங்கு தேசிய மொழியைப் படிக்கப் போகின்றான். மேலும் தமிழ்ப் பள்ளியிலேயே ஆங்கிலமும் தேசிய மொழியும் பயிற்றுவிக்கப் படுகின்றது. ஆதலால் இரு மொழித் திட்டம் நமக்கு வேண்டாம். தமிழ் பள்ளி தமிழ்ப் பள்ளிகளாவே இயங்கட்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தங்க மனிதர் துங்கு அவர்கள் தனது முதல் கூட்டணி தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப் பட்ட வாசங்கங்கள்- சுதந்திர மலாயாவில் தமிழ் சீனப் பள்ளிகள் தொடர்ந்தியங்கும். வழிப் பாட்டு சுதந்திரமும் தொடரும். இந்த இரண்டு உறுதி மொழிகளையும் ஏதோ இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டதைப் போல் தோன்றுகின்றது. இங்கு இப்போது வழிப் பாட்டு சுதந்திரத்திற்கும் மேலும் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த இரு மொழி திட்டத்தால் நிச்சயம் நாளை தமிழ்ப் பள்ளிகளுக்கு பலச் சோதனைகள் ஏற்படலாம். இதை அரசிடம் எடுத்துரைத்துப் மஇக வினர் வரும் பொதுத் தேர்தலுக்கு முன் நல்லத் தீர்வை எட்டி விட வேண்டும்.