ஸாகிட்: மலாய் என்ஜிஒ-கள் நஜிப்பை தனியே விட்டுவிடக்கூடாது

 

நஜிப் நிருவாகத்திற்கு எதிரான இரக்கமற்ற தாக்குதல்களை எதிர்கொள்ள பிரதமர் நஜிப்பை தனியாக விட்டுவிடக்கூடாது என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி.

இவ்வாறு கூறிய ஸாகிட், நஜிப்புக்கான தமது விசுவாசத்தை இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், நாட்டை உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட மலாய் ஆலோசனை மன்றம் (எம்பிஎம்) அளித்துள்ள பங்களிப்பை எடுத்துரைத்தார்.

நல்லவேளையாக, நஜிப் அவரது நிதானத்தை இழக்கவில்லை, ஏனென்றால் ‘ரசாக்கின்’ (பிரதமரின் தந்தை) இரத்தம் அவரது இரத்த நாளத்தில் ஓடுகிறது என்று ஸாகிட் இன்று நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜாலான் லெடாங்கில் இருக்கும் அரசாங்க வீடுகள் ஒன்றில் எம்பிஎம்மின் புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்து பேசுகையில் கூறினார்.

நாட்டை உருவாக்குவதற்கான அவரது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நானும் அவருக்கு தொடர்ந்து உதவுவேன், ஆனால் எங்களைத் தனியே விட்டுவிடாதீர்கள் என்று ஸாகிட் கேட்டுக் கொண்டார்.

நாட்டை ஒன்றுபடுத்தும் நமது திட்டத்திற்கு எம்பிஎம் எங்களுடன் இருக்கிறது என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு வாடகை இல்லை!

முன்னதாக, பல்லின மற்றும் பலசமயங்களைக் கொண்ட மலேசியாவை ஒன்றுபடுத்துவதில் காணும் சவால்கள் பற்றி அவர் பேசினார். எம்பிஎம் தொடர்ந்து பெரிதான திட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய ஸாகிட், எம்பிஎம்மின் மாத வாடகை ரிம2,800 மற்றும் தண்ணீர், மின்சாரம் போன்றவற்றின் செலவுகள் ஆகியவற்றை கட்டுவதற்கு அரசாங்கம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உதவும் என்றாரவர்.

இத்தொகையைச் செலுத்துவதற்கான “ஹலால் பணம்” எனக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று கேட்காதீர்கள் என்று ஸாகிட் கேட்டுக்கொண்டார்.

நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான புதிய வழிகளைக் காண்பது பற்றி எம்பிஎம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மேலும். உறுப்பியத்தை விரிவுபடுத்தி அதிகமான இளம் தொழிலியனர்களைச் சேர்க்க வேண்டும் என்றாரவர்.

எம்பிஎம் கடந்த பெப்ரவரி 2009 ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் நாட்டை வலுப்படுத்துவது, மலாய் கலாச்சாரம், இஸ்லாம், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடுவார்கள் என்று அதன் தலைமைச் செயலாளர் ஹசான் மாட் கூறினார்.