அம்னோ தொடர்ந்து மலேசியாவை வெற்றிக்கு இட்டுச் செல்லும், நஜிப்

 

வெற்றிப் பாதையில் மலாய்க்காரர்களையும், பூமிபுத்ராக்களையும், அனைத்து மலேசியர்களையும் இட்டுச் செல்லும் பொறுப்பை அம்னோ தொடர்ந்து ஏற்கும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.

சமயம், இனம் மற்றும் நாடு ஆகியவற்றுக்கான அம்னோவின் போராட்டம் பெரும்தன்மையுடையது, மனப்பூர்வமானது மற்றும் தூய்மையானது என்று அம்னோ தலைவருமான நஜிப் கூறினார்.

மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் அடைந்துள்ள வெற்றி அம்னோ நடத்திய போராட்டத்தின் விளைவாகும், குறிப்பாக அனைத்து உறுப்பினர்களும் இரத்தம் மற்றும் வியர்வைச் சிந்துவதற்கும், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்கும் கொண்டிருந்த விருப்பத்தின் விளைவாகும் என்று நஜிப் அவருடைய வலைத்தளத்தில் இன்று (டிசம்பர் 2), அம்னோவின் 71 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக, கூறுகிறார்.

மலேசியா சுதந்திரம் அடைவதற்கும், நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் அம்னோ காரணமாயிருந்தது, மற்றும் அதன் 71 ஆவது வயதில், நாடு புதியதாக, இளமையாக, இன்னும் இளமைப் பருவத்தில் இருப்பதாகக் கருதலாம்.

இளம் வயதாக இருந்த போதிலும், மலாய்க்காரர்களுக்கும், பூமிபுத்ராக்களுக்கும், இஸ்லாத்திற்கும், மலேசியாவுக்கும் நாம் எவ்வளவோ சாதித்திருக்கிறோம்.

அம்னோ மக்களுக்காக போராடும், இந்நாட்டை நேசிக்கும், மலேசியாவுக்காக கடைசிச் சொட்டு இரத்தம் வரையில் தியாகம் செய்ய விருப்பம் கொண்டிருக்கும் கட்சியாகும். அம்னோ மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சொந்தமானது, எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்டவர்களுக்கு அல்ல.

பூமிபுத்ரா செயல்திட்டத்தை தேசிய செயல்திட்டமாக்கியது யார்?

2009 ஆண்டில் நஜிப் நாட்டை வழிநடத்தத் தொடங்கியதிலிருந்து, பல புதியத் திட்டங்கள் பாரிசான் நேசனல் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டன, அவற்றில் பூமிபுத்தாவுக்கான செயல்திட்டங்களைத் தேசிய செயல்திட்டங்களாகத் தரம் உயர்த்தியதும் அடங்கும் என்று கூறும் நஜிப், அதற்கான புள்ளிவிபரத்தையும் பதிவு செய்துள்ளார்.

மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் தொடர்ந்து போட்டிக்குரியவர்களாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சொத்துடமை ஆகியவை உட்பட, இருப்பதை அம்னோ எப்போதும் உறுதி செய்யும் என்றும் நஜிப் கூறுகிறார்.

இவை அனைத்தும் இவ்வாண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பூமிபுத்ரா நல்வாழ்க்கை உருமாற்றம் என்ற திட்டத்தில் கூறப்பட்டுள்ளன. இவை நமது சாதணைகள் மற்றும் மலேசியாவில் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் எதிர்கால நாட்டங்கள் ஆகியவற்றைக் காட்டுகின்றன என்று நஜிப் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அம்னோவின் ஆண்டுப் பேரவை 2017 டிசம்பர் 5 லிருந்து 9 வரையில் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும். 5,739 பேராளர்கள் பங்கேற்பர்.