சரவாக் அரசு, 1963 மலேசியா ஒப்பந்தத்தின்கீழ் மாநிலத்தின் உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காக மெற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பற்றிக் கவலை கொள்ளவில்லை, ஆனால் அவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திறந்த மனத்துடன் உள்ளார், கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அது முக்கியமாகக் கருதுகிறது.
இவ்வாறு தெரிவித்த சரவாக் முதலமைச்சர் ஆபாங் ஜொகாரி ஓப்பெங், அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி மாநிலத்திற்குரிய உரிமைகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று நஜிப் வெளிப்படையாகவே அறிவித்துள்ளதுடன் இவ்விவகாரத்தில் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் பேச்சுகளை நடத்த வேண்டுமே தவிர உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது தகாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
“நான் உணர்ச்சிவசப்பட்டு பேச விரும்பவில்லை. மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அப்படிச் செய்வது சரியல்ல”, என நேற்று சிபுவில் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) மண்டலம் 8 கிளையின் பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்காளிடம் அவர் கூறினார்.
1963 மலேசிய ஒப்பந்தம் ஒரு புனிதமான அனைத்துலக ஒப்பந்தமாகும் என்று ஆபாங் ஜொகாரி குறிப்பிட்டார்.
“பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. (காலஞ்சென்ற முதலமைச்சர் அடினான் சாதேம்) இருந்தபோதே அதன்மீது இணக்கம் காணப்பட்டு சில விவகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, கிறிமினல் வழக்குகளில் வழக்கு தொடுக்க அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு அதிகாரம் கொடுத்தல்.
“இப்போது இரண்டாம் கட்டப் பேச்சுகளுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இதில் அரசமைப்பின் 112டி சட்டப்பிரிவு பற்றியும் 12 கடல் மைல் கடலோர எல்லை குறித்தும் பேசப்படும்”, என்றார்.
இதனிடையே, சில தரப்புகள், குறிப்பாக எதிரணியினர் மாநில உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காக போராடுவதாக சரவாக் அரசு கூறுவதெல்லாம் வெறும் ‘நடிப்பு’ என்று சாடியுள்ளனர். பொதுத் தேர்தல் நெருங்குவதால் பிஎன்னுடன் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அது அரங்கேற்றி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
-பெர்னாமா