தெங்கு ரசாலி ஹம்சா, 1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிளந்தானை பிஎன் இழந்ததற்கு டாக்டர் மகாதிர் முகம்மட்தான் காரணம் என்று பழி சுமத்தியதாக மாநில அம்னோ கூறுகிறது.
கடந்த வாரம் கோலாலும்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் தெங்கு ரசாலி ஹம்சா அவ்வாறு குறிப்பிட்டதாக கிளந்தான் அம்னோ துணைத் தொடர்புத் தலைவர் அஹ்மட் ஜஸ்லான் யாக்கூப் கூறினார்.
கூ லி என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் தெங்கு ரசாலி கிளந்தான் குவா மூசாங் எம்பி ஆவார்.
“மகாதிர் நண்பர்களையும் அவருடன் செர்ந்து போராடியவர்களையும் மதிப்பதில்லை. அவர் எப்போதும் சுயநலமாகத்தான் சிந்திப்பார்”, என நேற்றிரவு அஹ்மட் ஜஸ்லான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“கிளந்தானில் பிஎன் தோற்றுப்போனதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மகாதிர்தான் காரணம் என்பதை தெங்கு ரசாலியும் ஒப்புக்கொள்கிறார்”, என்றாரவர்.
1990 தேர்தலில் தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற செமாங்காட் 46 கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்தார். அம்னோ கட்சித்தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டிபோட்டு மகாதிரிடம் தோற்றுப்போனதும் அம்னோவில் ஒரு நெருக்கடி தோன்றி அதன் விளைவாக தெங்கு ரசாலி அமைத்த கட்சிதான் செமாங்காட் 46.
தேர்தலில் செமாங்காட் 46 பாஸுடன் ஒத்துழைத்தது. பிஎன் கிளந்தானை இழந்தது. அதுமுதல் கிளந்தான் பாஸ் கட்சியிடம்தான் உள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் கிளந்தானைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு உதப்போவதாக தெங்கு ரசாலி உறுதி கூறியிருப்பதாகவும் அஹ்மட் ஜஸ்லான் கூறினார்.