பாபாகோமோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவர் வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் இல்லையேல் நொடித்துபோனவராக பிரகடனப்படுத்தப்படுவார் என நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அவர் இன்று ரிம951,260 . 30 காசுகளை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
வான் அஸ்ரி நான்கு ஆண்டுகளுக்குமுன் அன்வார் தொடுத்த அவதூறு வழக்கில் தோற்றுப்போனார். அதற்குத்தான் இழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தது. இழப்பீட்டுத் தொகையை வங்கிக் காசோலையாகவும் ஒரு ரிங்கிட் தாள் நாணயமாகவும் இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் செலுத்தினார்.
“நாட்டில் அவதூறு வழக்குகளில் வழங்கப்பட்ட மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகைகளில் ஒன்று” என்று குறிப்பிட்ட வான் அஸ்ரி, ரிம 950,000ஐ வங்கிக் காசோலையாகவும் ரிம1,260.30ஐ ஒரு ரிங்கிட் தாளாகவும் காசுகளாகவும் கொடுத்தார்.
“கொடுக்க வேண்டியது ரிம951,260. 27 தான். ஆனால், மூன்று காசுகளை நான் போனால் போகட்டும் எனத் தானமாகக் கொடுத்திருக்கிறேன்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பணத்தைத் திரட்டுவதற்கு வான் அஸ்ரிக்கு மூன்று மாதங்களாயிற்று. பெரும்பாலும் வங்சா மாஜு அம்னோ உறுப்பினர்களிடமிருந்து அது சேகரிக்கப்பட்டது.