ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் ஜோகூர் எம்பி

ஜோகூர்   மந்திரி   புசார்   முகம்மட்  காலிட்    நோர்டின்   மாநில   வீடமைப்பு  மேம்பாட்டுத்    திட்டங்கள்   தொடர்பில்     ஊழல்கள்    புரிந்ததாகக்  கூறப்படுவதை   மறுத்தார்.

“அந்த   ஆதாரமற்ற   குற்றச்சாட்டுகளை   வன்மையாக    மறுக்கிறேன்.  அது   எனக்கு   எதிராகக்  கூறப்படும்    அவதூறு.   அதில்   உண்மையில்லை.  அதற்கு  எனக்கும்   சம்பந்தமில்லை”,  என  காலிட்   கூறினார்.

“என்னுடைய   நிர்வாகம்   கையூட்டு    வாங்குவதில்லை. கையூட்டு   வாங்காது. எனக்கோ  என்   நிர்வாகத்துக்கோ   கையூட்டு  கொடுக்க  முனைந்தால்   அதை   எதிர்ப்போம்”,  என்றாரவர்.

அவர்  இன்று   சட்டமன்றத்தில்   பட்ஜெட்  2018  மீதான   வாதத்தை   முடித்து  வைத்துப்   பேசுகையில்    இதைத்    தெரிவித்தார்.

கடந்த   வாரம் ,  வொங்   ஷு(டிஏபி-  செனாய்)   வெளியில்   கசிந்துள்ள   எம்ஏசிசியின்   சாட்சி   வாக்குமூலம்   ஒன்று     இணையத்தில்   வலம்   வருவதாகவும்  அதில்      காலிட்  ரிம12 மில்லியன்   பெற்றுக்கொண்டிருப்பதாகக்   கூறப்பட்டிருப்பதாகவும்   குறிப்பிட்டு  அது   உண்மையா    என்று   வினவி   இருந்தார்.

சில  வீடமைப்புத்    திட்டங்களில்    பூமிபுத்ராக்களுக்கு   மட்டுமே  என்றுள்ள  கட்டுப்பாட்டைத்   தளர்த்துவதற்காக  மற்றவர்களோடு    காலிட்டும்    மேம்பாட்டாளர்களிடமிருந்து     மில்லியன்   கணக்கில்    வாங்கி  இருப்பதாக   அந்த   சாட்சி    வாக்குமூலம்   கூறிக்கொண்டது.