இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 10-ம் நாள்

டிசம்பர் 4, 2017 – நெகிரி செம்பிலான், டாங்கி – நடைப்பயணத்தின் 10-ம் நாள், இன்று காலை மழையின் காரணமாக, சற்று தாமதமாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கினர் தியாகு குழுவினர்.

அவர்களைக் காலை பசியாரலுக்குப் பின்னர், வழியனுப்பி வைத்தனர் கம்போங் கெடோக் இளைஞர் குழுவினர். நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு, அறிமுகமே இல்லாத ஒருவர் பணத்தைச் செலுத்திவிட்டு சென்றிருந்தார். கேட்டதில், கோயில் தலைவர் என்று மட்டும் கடைக்காரர் தெரிவித்தார். இப்படியாக, முகம் தெரியாத, அறிமுகம் இல்லாத பலர் இவர்களின் நடைப்பயணத்திற்குத் தோள் கொடுத்து வருகின்றனர்.

காலை 10 மணியளவில், தியாகுவை வழியனுப்பிவிட்டு, நாங்கள் (ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்) ஜொகூர் பாரு நோக்கி புறப்பட்டோம்.

இன்றையப் பயணம் மிகவும் கடுமையாக இருந்தது என்று தியாகு தெரிவித்தார்.

“கெமிஞ்சேவிலிருந்து 26 கிமீ தூரம், மேடு பள்ளம் நிறைந்த சாலை, மிகவும் சிரமப்பட்டே எங்களின் பயணத்தை மேற்கொண்டோம். அதிக களைப்பாக இருந்தது, டாங்கி பட்டணத்தை அடைய மாலை மணி 4 ஆனது,” என்று தியாகு தெரிவித்தார்.

இன்று, டாங்கி ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் மலாக்கா மாநிலத் துணைத் தலைவர் தோழர் சாமிநாதன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மலாக்கா, ஜொகூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள் என, சுமார் 20 பேர் இன்றைய கலந்துரையாடலுக்கு வந்திருந்ததாக தியாகு தெரிவித்தார். மேலும், அவர்கள் இந்த இருமொழி திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் சொன்னார்.

அவர்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது, தமிழ்வழி கற்பதற்காகவே என்று பெற்றோர்கள் கூறியதாக தியாகு கூறினார்.

“இந்த மாதிரி டிஎல்பி திட்டம் எல்லாம், தமிழ்ப்பள்ளிக்கு வரும்னு தெரிஞ்சிருந்தா நான் என் பிள்ளய தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருக்கவே மாட்டேன்,” என்று ஒரு பெற்றோர் கூறியதை நம்மோடு பகிர்ந்துகொண்டார் தியாகு.

மேலும், “என் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, நான் ஏன் தேசியப் பள்ளிக்குப் பிள்ளையை அனுப்பினேன் என்பதற்கான காரணத்தை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொள்வேன்,” என்றும் அவர் கூறியதாக தியாகு தெரிவித்தார்.

இன்னொரு தந்தை, தம்பின் தமிழ்ப்பள்ளியில் டிஎல்பி திட்டம் அமலுக்கு வந்தால், தான்தான் அந்தப் பள்ளிக்கு முதல் எதிரி என்று கூறியதாகவும் தியாகு தெரிவித்தார்.

டிஎல்பி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன் பிள்ளையைத் தேசியப் பள்ளிக்கு அனுப்ப ஒரு பெற்றோர் தயாராகிவிட்டார். இன்னொருவர், தமிழ்ப்பள்ளிக்கு எதிராக செயல்படப்போவதாகக் கூறியுள்ளார்.

ஆக, இந்த டிஎல்பி விஷத்திட்டத்திற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு பரவியுள்ளதை நாம் காண முடிகிறது என்று தியாகு தெரிவித்தார்.

“தமிழ்வழிக் கல்வியின் அவசியம், தமிழ்ப்பள்ளியின் அவசியம், அதன் விழிப்புணர்வு மக்களிடையே மோலோங்கி வருவதை, இன்றைய கலந்துரையாடலின் போது கவனிக்க முடிந்தது,” என்று தியாகு சொன்னார்.

“தூரத்தில் இருந்தும் எங்களைச் சந்திக்க பலர் வந்திருந்தனர். எங்களுக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர், அது எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

“இன்றையப் பயணம் கடுமையானதாக இருந்தாலும், எங்களின் நோக்கம் (மக்களுடனான கலந்துரையாடல்) நிறைவேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைத்த தோழர் சாமிநாதனுக்கும் செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவுக்கும் எங்களின் நன்றி,” என்றார் தியாகு.

நாளை நெகிரி செம்பிலான், ரெம்பாவ் வட்டாரத் தமிழ் உணர்வாளர்கள், அவர்களைச் சென்று காணலாம்.

மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.

அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள்,  012 4341474 –  தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்  என்ற எண்களில் அழைக்கலாம்.

  • ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்