1990களின் தொடக்கத்தில் பேங்க் நெகராவுக்கு அன்னிய செலாவணி(போரெக்ஸ்) இழப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றாலும் நிதித்துறையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் நாடு 1எம்டிபி தொடர்பான பிரச்னைகளால் இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது என பக்கத்தான் ஹராபான் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
மகாதிரைப் பொருத்தவரை போரெக்ஸ் விவகாரம் 30 ஆண்டுகளுக்குமுன் தாம் பிரதமராக இருந்தபோது நடந்தது, அதற்கு ஏற்கனவே “முடிவு காணப்பட்டு விட்டது”.
“சட்டத்தை நிலைநிறுத்துவதாக இருந்தால் 1எம்டிபிமீதும் நஜிப் (அப்துல் ரசாக்) வங்கிக் கணக்கில் காணப்பட்ட ரிம2.6 பில்லியன்மீதும் ஒரு ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) வைக்க வேண்டும்.
“இதுதான் இப்போதைய விவகாரம், இன்று நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விவகாரம்.
“30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததற்கு அப்போதே தீர்வு கண்டாயிற்று. அதனால் நாட்டின் நிதி நிலவரம் பாதிப்படையவில்லை”, என மகாதிர் பெர்சத்துவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளியில் கூறினார்.
இதுதான் 1990 பேங்க் நெகாரா அன்னிய செலாவணி இழப்புகள் மீதான ஆர்சிஐ அறிக்கைக்கு மகாதிர் ஆற்றும் முதலாவது எதிர்வினை.
அந்த அறிக்கை பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட ரிம31.5 பில்லியன் இழப்புக்கு அங்கு அதிகாரியாக இருந்த நோ யாக்கூப் முகம்மட்தான் காரணம் என்று குறிப்பிட்டது.
இழப்பு வெளியில் தெரியாமல் அதை மூடி மறைப்பதில் மகாதிரும் அவரிடம் நிதி அமைச்சர்களாக இருந்த அன்வார் இப்ராகிமும் டயிம் சைனுடினும் நோ யாக்கூப்புக்கு உடந்தையாக இருந்தனர் என்றும் அது குற்றஞ்சாட்டியது.
ஆர்சிஐ விசாரணை நடத்தப்பட்ட முறையைக் குறைகூறியுள்ள பல விமர்சகர்களைப்போன்று மகாதிரும் தமது சாட்சியத்தின் முக்கிய பகுதிகளும் அன்வார் மற்றும் நோ யாக்கூப் ஆகியோரின் சாட்சியங்களும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதைப் பார்க்கையில் ஆர்சிஐ அமைக்கப்பட்டதன் நோக்கமே தம்மையும் மற்ற எதிரணித் தலைவர்களையும் களங்கப்படுத்துவதுதான் என்பது தெளிவு என்றாரவர்.
ஆர்சிஐ தாம் பணத்தைச் சுருட்டிக்கொண்டதாக மறைமுகமாகக் குறிப்பிடுகிறது என்று கூறிய மகாதிர் அது உண்மையல்ல என்றார்.
“இது மற்ற நாடுகளில் நடந்திருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள், ஏனென்றால் அறிக்கை முழுமையாகவும் இல்லை நியாயமாகவும் இல்லை.
“நான் பணத்தைத் திருடிவிட்டதாகக் குற்றஞ்சாட்ட விரும்புகிறார்கள். ஆனால், குற்றஞ்சாட்ட அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை”, என மகாதிர் கூறினார்.