டிசம்பர் 5, 2017 – நெகிரி செம்பிலான், ரெம்பாவ் – நடைப்பயணத்தின் 11-ம் நாள், இன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் தியாகுவும் அஞ்சாதமிழனும்.
இன்றைய பயணம் மிகவும் சிக்கலான ஒன்றாக அமைந்தது என்று தியாகு தெரிவித்தார்.
“டாங்கியிலிருந்து, காலை உணவு எதுவும் எடுக்காமல் நடக்கத் தொடங்கினோம், எப்போதும் போல சில கிமீ தூரம் நடந்தபின் உணவருந்தி, ஓய்வெடுக்கலாம் என்று. வழியில் ஒருவர் சொன்னார், இன்னும் 8 கிமீ தூரத்தில் ஒரு ஷெல் உள்ளது என்று. ஆக, அங்குச் சென்று பசியாறிவிட்டு, தொடர்ந்து நடக்கலாம் என்று முடிவெடுத்து நடந்தோம்.
“ஆனால், காட்டுப் பகுதி என்பதால் அங்குக் கடைகள் ஏதும் இல்லை. தொடர்ந்து கொஞ்ச தூரம் நடந்ததும், எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டு, மயங்கம் அடைந்துவிட்டேன்,” என்று, இன்று தான் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் போனதைப் பற்றி தியாகு நம்மிடம் விளக்கினார்.
“நேற்றிரவு நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, அதிகாலை 3 மணிக்குதான் உறங்க சென்றோம். பிறகு, 5 மணிக்கெல்லாம் எழுந்து, நடக்கத் தொடங்கிவிடோம். சுமார் 2 மணி நேரம் மட்டுமே தூக்கம், கால் வலி, பசியாறாமல் வெயிலில் நடந்ததால் எனக்கு மயக்கம் ஏற்பட்டுவிட்டது.
“கௌதம் என்னை உடனடியாக, அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் பரிசோதித்த தாதி, எனக்கு ஓய்வு தேவை என்று கூறினார். தோழர் அஞ்சாதமிழனுக்கும் இரத்த அழுத்தம் ஏற்பட்டிருந்தது. ஆக, இருவரையும் ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்தார், போதிய ஓய்வுக்குப் பின் தொடர்ந்து நடக்கலாம் என்றும் தாதி கூறினார்.
“ஆக, அடுத்த இடத்திற்குக் காரில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது இன்று. இந்த 11 நாள்களில், முதல் முறையாக நான் காரில் ஏறி, எங்களின் அடுத்த இலக்கான ரெம்பாவ், ஶ்ரீ முருகன் ஆலயம் நோக்கி, சுமார் 15 கிமீ காரிலேயேப் பயணித்தோம்,” என்றார் தியாகு.
இன்றைய சம்பவம், அடுத்தடுத்த நாள்களுக்கான தயார்நிலைக்கு ஒரு பாடமாக அமைந்தது என்றும் தியாகு தெரிவித்தார்.
“எங்களுக்கு, குறிப்பாக தியாகுவுக்குப் போதிய உறக்கமும் ஒய்வும் இல்லாமல் போனதால்தான் இன்று இப்படியாகிவிட்டது. இன்று காரில் பயணித்தது, சற்று மனநிறைவு இல்லாமல் போனது, ஆனால் எங்களின் நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடிக்க இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போதிய ஓய்வெடுத்து, மீண்டும் எங்கள் பயணத்தை நாளை உற்சாகத்துடன் தொடங்குவோம்,” என்று அஞ்சாதமிழன் சொன்னார்.
இன்று, ரெம்பாவ், ஶ்ரீ முருகன் ஆலயத்தில் பொது மக்கள் சிலரைச் சந்தித்து பேசியதாக தியாகு சொன்னார்.
இன்றிரவு, சற்று சீக்கிரமே உறங்கச் செல்லவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நாளை நெகிரி செம்பிலான், செனாவாங் நோக்கி அவர்களின் பயணம் தொடரும். செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் அலுவலகத்தில், நாளை தங்கி, ஓய்வெடுப்பார்கள். வாய்ப்பிருக்கும் சுற்றுவட்டாரத் தமிழ் உணர்வாளர்கள், அவர்களை அங்குச் சென்று காணலாம்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
- ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
என் ஆதரவு–எப்போதும்– உங்களின் நலனையும் கவனித்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்.