என்எப்சி: அது விலகிச் சென்றவர்கள் செய்த சதி

நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) தலைமச் செயல் அதிகாரி முகம்மட் சாலே இஸ்மாயில், தம்  நிறுவனத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பில் சர்ச்சை உண்டானதற்கு நிறுவனத்தைவிட்டு விலகிச் சென்றவர்கள்தான் காரணம் என்கிறார். சினார் ஹரியான் இதனைத் தெரிவித்துள்ளது.

“என்எப்சி-யை விட்டு விலகிச் சென்றவர்கள் நிறுவனத்தின்மீது ஆத்திரம் கொண்டு அதைக் கீழறுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.

“நிறுவனத்தின்மீது கொண்ட ஆத்திரத்தின் காரணமாக அதன் நிதி விவகாரங்களை மாற்றரசுக்கட்சியினரிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர் என்று நினைக்கிறேன்”, என்று அவர் கூறியதாக அந்நாளேடு தெரிவித்துள்ளது.

அவர்கள்மீது போலீசில் புகார் செய்திருப்பதாக முகம்மட் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் அவரின் துணைவியார் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் பதவி விலக வேண்டும் என்று கோரப்பட்டிருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார்.

அது தம் துணைவியார், பிரதமர்,துணைப்பிரதமர் ஆகியோர் முடிவு செய்ய வேண்டிய விசயமாகும் என்றாரவர். 

இதன் தொடர்பில் பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிசி ரம்லியிடம் தொடர்புகொண்டு முகம்மட் குறிப்பிடும் அவ்விருவரும்தான் பிகேஆரிடம் என்எப்சி விவகாரத்தைக் கசிய விட்டவர்களா என்று வினவியதற்கு அவர் சிரித்தாரே தவிர அதை உறுதிப்படுத்த மறுத்தார்.

“அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ மாட்டேன்….அது தகவல் தெரிவித்தவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்”, என்றார்.

விசாரணைக்காக போலீசார் விரைவில் கதவைத் தட்டுவார்கள் என்று எதிர்பார்க்கும் ரஃபிசி, தகவல் தெரிவித்தவர்கள்மீது விசாரணை நடத்துவது உண்மை விவகாரத்தைத் “திசைதிருப்பும்” முயற்சியாகத்தான் அமையும் என்றார்.

“போலீசார் கொண்டோமினியம் வாங்கிய விவகாரத்தின்மீது கவனம் செலுத்த வேண்டுமே தவிர தகவல் அளித்தவர்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கக் கூடாது”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் எளிய நிபந்தனகளில் என்எப்சி-க்கு வழங்கிய கடனில் ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கப்பட்டன என்றும் அப் பணத்தால் அம்னோ தலைவர்கள் பலரும் நன்மை அடைந்துள்ளனர் என்றும் ரசிஃப் தெரிவித்தார்.

அந்நிறுவனமும் அதனுடன் தொடர்புகொண்டவர்களும், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முறைகேடுகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் பிகேஆர் “மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தும்”, என்றாரவர்.

“ அவர்கள், செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.அதுதான் என் விருப்பம்”.

இவ்விவகாரம் தொடர்பில் ரஃபிசி இன்று பின்னேரம் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

TAGS: